அதிபர் புதினை வரவேற்க அமெரிக்காவின் B-2 மற்றும் F-22 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அதிபர் புதின் அமெரிக்காவின் அலாஸ்கா நகருக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
புதின் விமானத்தில் இருந்து இறங்கி வந்ததும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, புதினை வரவேற்கும் விதமாக B-2 மற்றும் F-22 ரக போர் விமானங்கள் கூட்டாகப் பறந்து சென்றன. அதனை புதின் திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்து வந்தார்.
மற்றொரு நாட்டு தலைவரை வரவேற்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது இயல்பு தானே என்று கூறப்பட்டாலும், உன்னிப்பாகக் கவனித்தால் தான் இதிலுள்ள ட்ரம்ப்பின் அரசியல் பிடிபடும் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது B-2 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டும் நிபுணர்கள், அதே போன்றதொரு தாக்குதலை ரஷ்யா மீதும் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என்பதையே புதினுக்கு ட்ரம்ப் மறைமுகமாகத் தெரிவித்திருப்பதாகக் கூறுகின்றனர்.