இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏற்கப் பிரதமர் மோடி மறுத்து விட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்ததில் இருந்தே, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கத் தொடங்கினார்.
இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த அவர், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் எனக்கூறி கூடுதலாக 25 சதவீதம் என இந்தியா மீது ஐம்பது சதவீத வரியைத் திணித்தார்.
டிரம்ப்பின் செயலுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது மட்டுமின்றி, இந்தியாவும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியது. தற்போது ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் முயற்சி எடுத்து வரும் நிலையில், பிரதமர் மோடியைத் தொடர்பு கொள்ளத் தொலைப்பேசி வாயிலாக நான்கு முறை முயற்சித்ததாக ஜெர்மன் நாட்டின் பத்திரிகையான (Frankfurter Allgemeine) பிராங்க்பர்ட்டர் ஆல்ஜெமின் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் செயல், டிரம்ப் மீதான கோபத்தைக் காட்டுவதாக உள்ளது எனக் கருத்து தெரிவித்துள்ள அந்தப் பத்திரிகை, டிரம்ப்பின் சதி வலையில் தாம் சிக்கிவிடக் கூடாது என்பதால் அழைப்பை ஏற்கப் பிரதமர் மோடி மறுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.