பிரான்ஸ், ரஷ்யா இடையே வெடித்துள்ள வார்த்தைப் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அப்படியென்ன நடந்தது… விரிவாகப் பார்க்கலாம்… இந்தச் செய்தித் தொகுப்பில்.
ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஒருபக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்…. அதே வேளையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னிறுத்தி மற்றொரு பக்கம் காய்களை நகர்த்தி வருகின்றன.
அண்மையில் பிரெஞ்ச் டிவி ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்,ரஷ்யாவைக் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக ரஷ்யாவைப் பொது எதிரி என்று அவர் அடையாளப்படுத்தியது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. ரஷ்ய அதிபரைப் பிரிடேட்டர் (predator) என்றும், ogre at our doorstep என்றும் கடுமையான வார்த்தைகளை உபயோகித்திருந்தது சர்ச்சைக்கு உள்ளானது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் ஆத்திரமூட்டும் பேச்சுக்கு ரஷ்யாவும் கடுமையான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆதரவாளரும், கிரெம்ளிக் ஆதரவு தொலைக்காட்சி தொகுப்பாளருமான விளாடிமிர் சோலோவியோவ் (Vladimir Solovyov), அரசு தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியின்போது, பிரான்ஸை அச்சுறுத்தும் வகையில் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தினார்.
பிரான்ஸை ரஷ்யா கைப்பற்றினால், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிகாரிகளின் காலணிகளைத் துடைத்து சுத்தப்படுத்த அனுமதிக்கப்படுவார் என்றும், பிரான்ஸ் அதிபர் மாளிகையான எலிசேவில் ரஷ்ய வீரர்களை நிறுத்துவது பற்றியும் விளாடிமிர்ச் சோலோவியோவ் விவரித்திருந்தார்.
சோலோவியோவின் பேச்சை அங்கீகரித்துள்ள ரஷ்யாவின் அரசியல் விஞ்ஞானியான (Sergei Mikheyev) செர்ஜி மிகீவ்,ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பா எந்தச் சமரசத்தையும் எதிர்பார்க்ககூடாது என்றார். மேலும், உக்ரைனில் தரைப்படைகள் இருக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பிய சோலோவியோவ், European mangy animals உக்ரைன் வரக் காரணம் என்ன? அவற்றை மீண்டும் அங்கேயே புதைக்க முடியுமா என்று ஐரோப்பிய நாடுகளை அவமதிக்கும் வகையில் வார்த்தைகளை உபயோகித்தார்.
ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கும் எனக் கடந்த காலங்களிலும் சோலோவியோவ் பேசியிருக்கிறார். தற்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்குக் கடுமையான பதிலடி தரும் வகையில் அவர் பேசியது இருநாடுகளுக்கு இடையே வார்த்தைப் போராக மாறியுள்ளது.
ஒரு நாட்டின் அதிபரை, அரக்கன் என்று பிரான்ஸ் அதிபர் விமர்சித்திருப்பதில் இருந்து தொடங்கிய இந்த வார்த்தைப் போரானது, மூன்றாம் உலகப் போர் குறித்த அச்சங்களுக்கு அச்சாரமிட்டுள்ளதாகச் சர்வதேச அரசியல் சமூகம் கருதுகிறது.