இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவிகிதம் வரை வரி விதித்திருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் அமெரிக்க எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை அமெரிக்க நிறுவனங்கள் உணரத் தொடங்கியுள்ளன.
இந்தியாவுக்கு 50 சதவிகித வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விமர்சனக் கணைகள் வீசப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 27ம் தேதி முதல் அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.
இதன் தாக்கத்தைப் பெப்ஸி, கோகோ கோலா, சப்வே, கேஎஃசி, மெக்டொனால்ட்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. வர்த்தகப் போர் காரணமாக சுதேசி பொருட்களை ஆதரிக்குமாறு இந்தியர்களை வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, பொருளாதாரச் சுயநல அரசியல், உலக அளவில் பரவி வருவதாகவும், தங்களது சொந்த நலனில் மட்டுமே சில நாடுகள் கவனம் செலுத்துவதாகவும் அமெரிக்காவை மறைமுகமாகச் சாடியிருந்தார். இது தற்போது மக்களிடையே உணர்வுபூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஆம் ஆத்மி எம்.பி., அசோக்குமார் மிட்டல், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதியுள்ள கடிதமும் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க வரி விதிப்பின் மூலம், 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதேசி இயக்கத்தை 146 கோடி இந்தியர்களும் உணர்வுபூர்வமாக உணர்ந்திருப்பதாகக் கூறினார்.
அந்த உணர்வை இந்தியர்கள் வெளிப்படுத்தினால், பொருளாதார தாக்கம் இந்தியாவைவிட அமெரிக்காவுக்குத்தான் அதிகமாக இருக்கும் என்று டிரம்பை எச்சரித்திருந்தார். பெப்சிகோ, மெக்டொனால்ட்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்டுள்ள வணிகத்தால் கொள்ளை இலாபத்தை ஈட்டுகின்றன.
மெக்டொனால்டுகளை இயக்கும் நிறுவனமான Westlife Foodworld Limited 2024ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 390 கோடி வருவாயை ஈட்டியது. இது முந்தைய ஆண்டை விட 5 சதவிகிதம் அதிகம். பெப்சிகோ இந்தியா அதே நிதியாண்டில் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியிருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பெப்சிகோ இந்தியா நிறுவனம், 4000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருப்பது, இந்திய சந்தைக்கான நீண்டகால உறுதிபாட்டை எடுத்துக்காட்டுகிறது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடாவில் அமெரிக்காவைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கவிட்ட நிலையில், இந்தியாவில் வீசும் அமெரிக்க எதிர்ப்பு அலை, அமெரிக்க நிறுவனங்களுக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.