திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலையை அபகரிக்க முயலும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அரியமங்கலம் அடுத்த காமராஜர் நகரை சேர்ந்த அபுபக்கர் ஜெய்லானி என்பவர் பாகனூரில் அரிசி ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை அடைக்க முடியாததால் அரிசி ஆலையை விற்க முயற்சி செய்தார்.
அப்போது, முன்னாள் அமைச்சர்ச் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் எனக்கூறி ஜெய்லானியை அணுகிய ரவி, அருள்முருகன், மாரிமுத்து ஆகிய 3 பேர், 7 கோடி ரூபாய்க்கு ஆலையை விலைபேசி தங்கள் பெயர்களில் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், 3 கோடியே 27 லட்சம் ரூபாயை மட்டுமே கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுகுறித்துக் கேட்டபோது பஞ்சாயத்து தலைவர் கே.எஸ் சுந்தரம் மற்றும் அவரது சகோதரர் பாலு ஆகியோர் ஜெய்லானிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் சென்ற ஜெய்லானி, அரிசி ஆலையை மீட்டுத்தரக்கோரியும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மனு அளித்தார்.