இந்தியாவுடனான உறவில் ட்ரம்ப் அண்மைக் காலமாகவே இரட்டை நிலைபாட்டில் இருந்து வருகிறார். இந்தியாவைப் பாதிக்கும் நடவடிக்கைகைளத் தொடர்ச்சியாக அவர் மேற்கொண்டு வருகிறார். ட்ரம்பின் இரட்டை வேடம் குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..
இந்தியா மீதான 50 சதவீத வரிவிதிப்புக்குப் பின்னர், ட்ரம்ப்பின் அனைத்துச் செயல்பாடுகளுமே சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளன. அண்மையில் பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாடியபோது முதல் ஆளாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு எப்போதும் போல் சிறப்பாக உள்ளதாகவும், பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் வலுவான நட்பைத் தொடர்ந்து வருவதாகவும் கூறினார். தமக்கும் மோடிக்கும் எந்தக் கருத்து வேறுபாடுகளும் இல்லை எனக் கூறிய ட்ரம்ப், தங்களது நட்பின் அடையாளமாகத்தான் மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் விளக்கம் அளித்தார்.
இன்னும் சில வாரங்களுக்கு முன்னால் சென்றால், இந்தியாவைச் சீனாவிடமும், ரஷ்யாவிடமும் இழந்துவிட்டோம் என ட்ரம்ப் பொதுவெளியில் வெளிப்படையாகவே புலம்பியிருந்தார். இதனையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இந்தியாவுடன் ஏற்பட்ட உறவு விரிசலைச் சீரமைக்க, ட்ரம்ப் தவியாய் தவித்து வருவதாகத் தோன்றும். ஆனால், உண்மை நிலவரம் வேறாக உள்ளது.
இந்தியர்கள்தான் அதிகளவில் அமெரிக்காவுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஐடி சேவைகளை வழங்கி வருகின்றனர். இதற்கு முட்டுகட்டைப் போடுவதுபோல அண்மையில் ட்ரம்ப் அரசு hire act என்ற புதிய மசோதாவைத் தாக்கல் செய்தது. இதனால், இந்தியாவில் இருந்தபடி அமெரிக்காவுக்குப் பணியாற்றும் ஐடி ஊழியர்களின் வேலைப் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள சபஹர்த் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்து இந்தியா நிர்வகித்து வருகிறது. இதன் மூலம், ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா எளிதாக வர்த்தகம் மேற்கொண்டும் வருகிறது. இதற்கும் குடைச்சல் தரும் வகையில், சபஹர் துறைமுகத்தை நிர்வகிக்க இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை அமெரிக்கா ரத்து செய்தது. இதனால், இந்திய நிறுவனங்கள் பல கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கும் ஆபத்தில் உள்ளன.
இதுவரைக் கொடுத்த தொல்லைகள் எல்லாம் போதாது என்று, தற்போது எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் பணியாற்ற செல்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இப்படி இந்தியா விவகாரத்தில் ட்ரம்ப் பேசுவது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. ட்ரம்பிடம் இப்போது பேட்டி எடுத்தால்கூட, இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதாகதான் அவர் கூறுவார். ஆனால், அந்தப் பேட்டி ஒளிபரப்பாவதற்குள் இந்தியாவுக்கு எதிரான ஏதாவது ஒரு வேலையை அவர் பார்த்துவிடுவார். அதுதான் அமெரிக்காவின் ட்ரம்ப் மாடல் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
















