உலகமே எதிர்பார்த்திருந்த நல்ல விஷயமாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே முதற் கட்ட அமைதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், விரைவில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் அனைத்து பணய கைதிகளும் விடுவிக்கப் படுவார்கள் என்றும், இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப் பட்ட எல்லைப் பகுதிக்குத் திரும்பப் பெறும் என்றும் தெரிவித்துள்ளார். முதல் கட்ட அமைதி ஒப்பந்தம் எதைக் குறிக்கிறது? அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடித்துச் செல்லப் பட்டனர். இதனையடுத்து, இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில், குழந்தைகள் உட்பட 67000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அதிபர் ட்ரம்ப், காசா போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். கடந்த செப்டம்பர் கடைசி வாரத்தில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப் காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 20 அம்ச காசா அமைதி திட்டத்தை அறிவித்தார்.
இந்த அமைதித் திட்டத்தை அறிவித்தபோது, அதிபர் ட்ரம்புடன் நின்றிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். ஹமாஸுக்கு இது கடைசி வாய்ப்பு என்றும், காஸாவில் தனது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் ஹமாஸ் கைவிட மறுத்தால், அது முற்றிலுமாக அழிக்கப்படும் என்று எச்சரித்த அதிபர் ட்ரம்ப், ஹமாஸுக்கு 72 மணிநேர காலக்கெடு விதித்தார்.
அக்டோபர் 3ம் தேதி, அதிபர் ட்ரம்பின் காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்ட ஹமாஸ் உயிருடன் இருக்கும் மற்றும் இறந்த அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது. அதன் பிறகு, இஸ்ரேல்0 ஹமாஸ் பிரதிநிதிகளுக்கு இடையில் முதல்கட்டப் பேச்சுவார்த்தை கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி எகிப்தில் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய இரண்டாம் நாள் நினைவு நாளில், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
“இஸ்ரேலுக்கு இது ஒரு சிறந்த நாள்” என்று கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “கடவுளின் உதவியுடன் பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வருவோம் என்றும் இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கும் புனித பணிக்குத் தங்களை அர்ப்பணித்த இஸ்ரேல் இராணுவ வீரர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அமைதி திட்டக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
காசா போரின் நோக்கங்களை அடைவதற்கும் இஸ்ரேல் மக்களை அனைத்து வகையிலும் பாதுகாப்பதற்கும் தனது அரசும், ராணுவமும் தொடர்ந்து செயல்படும் என்று பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார். இந்த அமைதி ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ள ஹமாஸ், விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் பட்டியலையும் வழங்கியுள்ளது. போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை செய்தியைக் கொண்டாடும் காசா மற்றும் இஸ்ரேல் மக்களின் கொண்டாட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. காசாவின் கான் யூனிஸில் மக்கள் தெருக்களில் கூடி உற்சாகமாகக் கைதட்டி நடனமாடி மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
டெல் அவிவின் பணயக்கைதிகள் சதுக்கத்திலும் பணயக்கைதிகளின் குடும்பங்களும் அவர்களது ஆதரவாளர்களும் “ட்ரம்புக்கு நோபல் பரிசு” என்று கோஷமிட்டப்படியே தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். அமெரிக்காவிலும் இஸ்ரேல் மக்கள் இந்த ஒப்பந்தத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பணயக்கைதிகளின் குடும்பத்தினர், அதிபர் ட்ரம்ப்பை தொலைபேசியில் அழைத்து, நன்றி தெரிவித்தனர்.
கடவுள் அமெரிக்க அதிபரை ஆசீர்வதிப்பாராக என்றும் வாழ்த்து தெரிவித்தனர். இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமைதி திரும்புவதற்கான சூழல் உருவாகியுள்ளது. போர் முடிந்ததும் காசாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இப்போதைக்குத் தெரியவில்லை. 20 அம்ச காசா அமைதி திட்டத்தில் ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும், அதன் சுரங்கப்பாதைகள் மற்றும் ஆயுதத் தயாரிப்பு மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என்றும், போருக்குப் பிந்தைய காசா அரசில் ஹமாஸுக்கு இடமில்லை என்றும் உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் இவற்றையெல்லாம் ஏற்பார்களா ? என்பது கேள்விக்குறியே ! இதுகுறித்த அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளின் போது ட்ரம்பின் காசா அமைதி திட்டம் நின்று போகலாம். ட்ரம்பின் அமைதி திட்டத் தோல்விக்கு ஒருவர் ஒருவர் பழி போடலாம். கடந்த காலங்களில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் இப்படித் தான் நடந்துள்ளது. இந்த முறை ஒரு நம்பிக்கை உள்ளது. 20 அம்சங்களையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஹமாஸ் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஏற்கெனவே தன்னுடைய முதலாவது ஆட்சிக்காலத்தில் அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, சூடான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிடமிருந்து பெற்றார் டிரம்ப். தன்னுடைய இரண்டாவது ஆட்சி காலத்தில், அதிபர் ட்ரம்ப், கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளையும் இஸ்ரேலை அங்கீகரிக்க வைத்துள்ளார்.
முதல் கட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை வைத்தே அடுத்த கட்டத்துக்கு இந்தத் திட்டம் நகரும் என்றாலும், இஸ்ரேலுக்காகவும் காசா மக்களுக்காகவும் காசாவை மீண்டும் கட்டியெப்புவது அவசியம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறார் ட்ரம்ப். அதில் உண்மை இல்லாமல் இல்லை என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.