நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள், புலிகளின் தாக்குதல்களால் மனித உயிர்கள் பரிதாபமாகப் பறிபோகின்றன… வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் முழுப் பின்னணிதான் என்ன? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இந்த 3 மாநில வனப்பகுதிகளை ஒட்டிக் கூடலூர் சட்டமன்றத் தொகுதி இருகிறது. இங்குதான் காட்டு யானைகளால் மக்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.. கூடலூர் பகுதி மக்கள் தேயிலை, குறுமிளகு, வாழை என விவசாயம் செய்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது கூடலூர். இந்த வனப்பகுதியில் யானை, புலி,சிறுத்தை, கரடி காட்டுமாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூடலூர் பகுதியில் யானைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி உலா வரும் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விளை நிலங்களுக்குள் நுழைந்து சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. கூடலூர் நகரம், பந்தலூர், பாடந்துறை, தேவர் சோலை, ஓவேலி, மண் வயல், சேரம்பாடி, தேவாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உலாவரும் காட்டு யானைகள் குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்துகின்றன.
தினமும் காட்டு யானைகளின் தொந்தரவு தொடர்வதால் அப்பகுதி மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுவாழ்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 160 பேர் யானை தாக்கி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்துமனிதர்களைப் பாதுகாக்கக தவறிய வனத்துறையினரை கண்டித்து சாலை மறியல், முற்றுகை போராட்டம், கடைஅடைப்புப் போராட்டம் எனப் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் பொதுமக்கள் ஈடுபட்டனர். மறுபுறம் பாடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை புலிஅடித்துக் கொன்று விடுவதாலும் அப்பகுதி மக்கள் பீதியில் இருக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் புலிகள் தாக்கி இறந்துள்ளன. கூடலூர்தொகுதிக்குக் கொடுத்தத எந்தவொரு வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டும் பொதுமக்கள், இனி வரும் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்காமல் புறக்கணிக்கப் போவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.
யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளால் கூடலூர் பகுதி மக்கள் நாள்தோறும் உயிர்பயத்தில் வாழ்கின்றனர். உயிர்பலிகள் தொடராமல் வனத்துறை மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.