பழைய நண்பர்களான பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான போர் தீவிரமாகி உள்ளது. துராண்ட் கோடு எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு வந்திருக்கும் நிலையில் இந்த ராணுவ மோதல் எதைக் காட்டுகிறது ? ஆப்கான்- பாகிஸ்தானுக்கும் இடையே என்ன பிரச்னை என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
வரலாறு முழுவதும் பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் ஒரு சிக்கலான உறவையே கொண்டுள்ளது. தாலிபான்களை நம்பிக்கைக்குரிய துணையாகப் பாகிஸ்தான் நம்பினாலும், தாலிபான் தலைமையிலான ஆப்கான் அரசு எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே பாகிஸ்தானுடன் ஒத்துழைக்கிறது. 1996-ல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோது தாலிபான் அமைப்பில் பாகிஸ்தான் குறிப்பிடத் தக்க செல்வாக்கைக் கொண்டிருப்பதாகவும், தாலிபான்களுக்கு நிதி மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதாகவும் நம்பப்பட்டது.
இரட்டைக் கோபுரத்து தாக்குதலுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் படையெடுத்ததை அடுத்து, பின் லேடன் மற்றும் பல தாலிபான்களுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது. இந்த நேரத்தில் தான், பாகிஸ்தான் தாலிபான் என்று தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற போராளிக் குழு உருவானது. இது, ஆப்கான் தாலிபான்கள் கொள்கைகளுடன் இருந்தாலும், பாகிஸ்தான் அரசுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களில் தீவிரமாக இறங்கியது.
பாகிஸ்தான் தாலிபான்களை அழிக்கப் பாகிஸ்தான் அரசு முழு முயற்சியில் இறங்கியது. அதனால், ஆப்கானிஸ்தானில் உள்ள மறைவிடங்களில் தஞ்சம் அடைந்தனர் பாகிஸ்தான் தலிபான்கள். அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து, ஆப்கானை கைப்பற்றிய தாலிபான் அரசு, தெஹ்ரீக்-இ-தலிபான் போராளிகளை அடக்க உதவும் என்று பாகிஸ்தான் நம்பியது. ஆனால் நடந்ததோ வேறு. ஆப்கானில் தாலிபான் அரசு வந்தபிறகு தான் பாகிஸ்தானுக்குள் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்தது.
டிடிபியை ஆதரிப்பதா அல்லது பாகிஸ்தானுடனான தங்கள் உறவுக்கு முன்னுரிமை அளிப்பதா என்பதை ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் முடிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் தூதரும் ஆப்கானிஸ்தானுக்கான சிறப்பு பிரதிநிதியுமான ஆசிப் துரானி தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஆண்டுக்கு ஆண்டு, பாகிஸ்தான் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, ஆப்கான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, ஆப்கான் தலிபான்கள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும், மேலும், 25 பாகிஸ்தான் ராணுவ நிலைகளை ஆப்கான் படைகள் கைப்பற்றியதாகவும் ஆப்கான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி தாக்குதலை’ நடத்தியதாகத் தெரிவித்துள்ள ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம், மீண்டும் தங்கள் வான் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால் உறுதியான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரிக்க தூரந்த் எல்லைக் கோடுகுறித்த பிரச்சினை ஒரு முக்கிய காரணமாகும். பிரிட்டிஷ் ஆட்சியின்போது வரையப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு இடையேயான இந்த எல்லைக் கோட்டை ஆப்கானிஸ்தான் ஏற்றுக்கொள்வதில்லை.
தூரந்த் கோடு உருவானதில் இருந்து ஆப்கானில் அமைந்த எந்த அரசும் இந்த எல்லை வரையறையை அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. மேலும் தாலிபான் ஆட்சிவந்ததிலிருந்தே பல்லாயிரக்கணக்கான ஆப்கான் அகதிகளை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது, இதுவும் பாகிஸ்தான் தலிபான் மோதலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. சமீபத்தில் சவுதி அரேபியாவுடன் நேட்டோ போன்ற ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து ராஜா தந்திர பேச்சுவார்த்தைகளையும் இருநாடுகளும் முன்னெடுக்க வேண்டும் என்று சவூதி அரேபியா வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலுக்குச் செல்லும் வழியில் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே இப்போது ஒரு போர் நடப்பதாகக் கேள்விப்பட்டதாகவும், தாம் திரும்பி வரும் வரை காத்திருக்க சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ராஜா தந்திரத்தில் தான் வல்லவராக இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பின் வெளியிட்ட கூட்டறிக்கையில், எல்லை தாண்டிய அனைத்து பயங்கரவாதத்தைக் கண்டித்ததோடு, அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இதற்காக, பாகிஸ்தானில் உள்ள ஆப்கான் தூதருக்கு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பி எச்சரித்துள்ளது. இப்போதும் கூட, பாகிஸ்தான் ராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்க காலதாமதம் ஆகிவிடவில்லை. இருப்பினும், அதற்கான வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது.