அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக உலகின் சக்திவாய்ந்த விமானப்படை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
உலகளவில் ஒவ்வொரு நாட்டின் ராணுவ பலத்தில் விமானப்படையின் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே பல்வேறு போர்களில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது அந்தந்த நாடுகளின் விமானப்படைதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
2025-ம் ஆண்டின் GLOBAL FIREPOWER தரவுகளின்படி உலக ராணுவ செலவில் சுமார் 40 சதவீதத்தை கொண்டுள்ள அமெரிக்கா, எந்த நாடும் ஒப்பிட முடியாத உயரத்தில் விமானப்படை வல்லமையில் முன்னிலை வகிக்கிறது.
அடுத்தபடியாக ரஷ்யா 2-ம் இடம் பிடித்துள்ள நிலையில், சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது சக்திவாய்ந்த விமானப்படையை கொண்டுள்ள நாடாக உருவெடுத்துள்ளது. WORLD DIRECTORY OF MODERN MILITARY AIRCRAFT என்ற அமைப்பின் புதிய பட்டியலிலும், இந்திய விமானப்படை 69.4 TVR மதிப்பெண்ணுடன் 3-வது இடத்திலும், சீனா 63.8 TVR மதிப்பெண்ணுடன் 4-வது இடத்திலும் உள்ளது. இந்தப் பட்டியலில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் 242.9 TVR மதிப்பெண்ணுடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 142.4 TVR மதிப்பெண்ணுடன் ரஷ்யா 2-ம் இடத்திலும் உள்ளன.
2023-ம் ஆண்டில் உலகளாவிய ராணுவ செலவு 2.44 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளதாக STOCKHOLM INTERNATIONAL PEACE RESEARCH INSTITUTE அறிக்கை தெரிவிக்கிறது. ரஷ்யா – உக்ரைன் போரும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களும் இதற்கு முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன.
அமெரிக்காவின் வல்லமைக்கு அதன் வலுவான தொழில்துறை அமைப்பே அடிப்படையாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரான்ஸ்போர்ட் விமானங்கள், டேங்கர்கள் என உலகின் எந்த மூலைக்கும் செல்லக்கூடிய திறனை அந்நாடு பெற்றுள்ளது.
US AIR FORCE, US ARMY AVIATION, US NAVY AVIATION மற்றும் US MARINE CORPS AVIATION என 4 தனித்தனி பிரிவுகளாக உள்ள அமெரிக்க விமானப்படை, WDMMA அமைப்பால் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியா 3-ம் இடம் பிடித்துள்ளது.
ஆனால், உலகளவில் அணுச் சக்தி நாடுகளுள் ஒன்றான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட இடம்பெறவில்லை. சுமார் 900 – 1000 போர் விமானங்களை பாகிஸ்தான் வைத்துள்ளபோதும், அவற்றின் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில் தனது விமானப்படை திறனில் அதிவேக முன்னேற்றம் கண்டு வரும் இந்தியாவோ, அண்மையில் நடத்திய ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் மூலம் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது வலுவான நிலைபாட்டை காட்டி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
இதன் மூலம் இன்று தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் இந்தியா. உலகின் சக்திவாய்ந்த விமானப்படை கொண்ட நாடுகளின் வரிசையில் 3-ம் இடம் பிடித்துச் சாதித்திருக்கிறது.