பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வருகிறது. எல்லைப்பகுதியில் இருநாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து மோதலை நிறுத்துவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 48 மணி நேரத்திற்கு மோதலை நிறுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இருப்பினும், போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்,10 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதில் 3 பேர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான், இலங்கை உடனான டி20 முத்தரப்பு தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் மக்கள் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீதான பாகிஸ்தானின் காட்டுமிராண்டி தனமான தாக்குதல், அப்பட்டமாக மனித உரிமை மீறல் என குறிப்பிட்டுள்ள ரஷீத் கான், பாகிஸ்தான் உடனான போட்டிகளில் இருந்து விலகும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.