அமெரிக்கா விதித்த கடும் சுங்க வரிகளால் இந்தியாவின் ஏற்றுமதி துறை சவால்களை எதிர்கொண்டாலும், இந்தியா தனது ஏற்றுமதி துறையைப் பல்துறை நோக்கில் விரிவாக்கி உலக சந்தைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்
அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விதித்த 50 சதவீத இறக்குமதி வரி, இந்தியாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில், 60 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாகத் துணி நூல், நகைகள், கடல் உணவுப் பொருட்கள், தோல் பொருட்கள் போன்ற தொழிலாளர் சார்ந்த துறைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
இதன் விளைவாக, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி கடந்த 4 மாதங்களில் 37.5 சதவீதம் குறைந்தது. இதனால் மே 2025-ல் 8.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வர்த்தகம், கடந்த செப்டம்பர் மாதத்திற்குள் 5.5 பில்லியன் அமெரிக்க டாலராகச் சரிந்துள்ளது என GLOBAL TRADE RESEARCH INITIATIVE அமைப்பின் அறிக்கை விவரித்துள்ளது. இருப்பினும் இந்தத் தாக்கம் இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் குலைக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் 2025-ம் ஆண்டுக்கான உலக பொருளாதார முன்னோட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் வளர்ச்சி 2026-ம் நிதியாண்டில் 6.6 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய மந்த நிலையிலும் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வலிமையை பிற நாடுகளுக்கு எடுத்துரைத்துள்ளது.
அமெரிக்க வரிகளின் தாக்கத்தை ஒரு புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா, உலக சந்தையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் திட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் பலனாகச் செப்டம்பர் 2025-ல் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 6.7 சதவீதம் உயர்ந்தது.
குறிப்பாக மின்னணு பொருட்கள், பொறியியல் சாதனங்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிகள் பெரிய அளவில் இருந்தன. அதிலும் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி மட்டும் 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
அதேபோல, கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 23 சதவீதமும், அரிசி ஏற்றுமதி 33 சதவீதமும், நகைகளின் ஏற்றுமதி 0.4 சதவீதமும் உயர்வைச் சந்தித்துள்ளன. ஆனால், மற்றொருபுறம் ரெடிமேட் துணிகள் மற்றும் கைத்தறி பொருட்கள் போன்ற தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதியில் தொடர்ந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக ரெடிமேட் துணிகளின் ஏற்றுமதி 10 சதவீதமாகவும், கைத்தறி பொருட்களின் ஏற்றுமதி 11 சதவீதமாகவும் குறைந்துள்ளன. இருப்பினும் இந்தியாவின் பல்துறை ஏற்றுமதி முயற்சிகள் பல நாடுகளில் வெற்றி கண்டுள்ள நிலையில், கொரியா, ஐக்கிய அரசு எமிரேட்ஸ், ஜெர்மனி, வியட்நாம், மெக்சிகோ, ரஷ்யா, நைஜீரியா, கனடா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 24 நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி நேர்மறையான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்த நாடுகள் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 59 சதவீத பங்கைக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி 220 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இறக்குமதி 375 பில்லியன் அமெரிக்க டாலராகவும் பதிவாகி, வணிக பற்றாக்குறை 155 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
எனினும், அமெரிக்காவின் அதீத சுங்க வரிகள் நிரந்தரமாகும் அபாயம் உள்ளதால், இந்தியாவின் எதிர்கால பாதைகள் அத்தனை எளிதாக இருக்காது எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கற்பித்தல், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தரச் சான்றிதழ் துறைகளிலும் சவால்கள் நீடித்து வரும் நிலையில், அவற்றைச் சமாளிக்க இந்தியா உள்நாட்டு அடித்தளத்தை வலுப்படுத்திச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நேரடி ஆதரவு வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், எதிர்ப்பை வாய்ப்பாக மாற்றும் இந்தியாவின் துணிச்சலான முயற்சி, காலப்போக்கில் ஒரு வலிமையான, பல்துறை ஏற்றுமதி அமைப்பைக் கட்டாயம் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.