33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அணுசக்தி சோதனையை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான அணு ஆயுதங்களை உருவாக்கும் செயல்திட்டத்தில் சீனா தீவிரமாக உள்ளது. ரஷ்யா அணுசக்தியால் இயங்கும் பியூரெஸ்ட்னிக் Burevestnik குரூஸ் ஏவுகணை மற்றும் Poseidon போஸிடான் நீருக்கடியில் செல்லும் ட்ரோன் ஆகியவற்றை வெற்றிகரமாகச் சோதனை நடத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2000ம் ஆண்டில் அமெரிக்காவுடனான புளூட்டோனியம் அகற்றல் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அதிபர் புதின் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, 2001-ல் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. தொடர்ந்து ஐரோப்பாவில் ஏவுகணை தடுப்பு வளையங்கள் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளால் நிலைநிறுத்தப்பட்டன.
இதுவே நவீனத் தாக்குதல் அமைப்புகளையும் ஏவுகணைகளையும் உருவாக்க வேண்டிய வேண்டிய கட்டாயத்தை ரஷ்யாவுக்கு ஏற்படுத்தியது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதங்களின்எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பாக நியூ ஸ்டார்ட் என்ற ஒப்பந்தம் கடந்த 2010ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியதை தொடர்ந்து, இந்தஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், அணு ஆயுத விவகாரத்தில் இனிகட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கக மாட்டோம் என்றும்உறுதியாகத் தெரிவித்து விட்டது.
ஆனாலும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகும் ஓராண்டுக்கு ஒப்பந்தத்தின் வரம்புகளைக் கடைபிடிப்பதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு, உக்ரைன் மீது ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியது.
நேட்டோ நாடுகளின் நீண்ட தூரம்சென்று தாக்கும் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்குள் உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டால், அதிர்ச்சியூட்டும் பதிலடியை ரஷ்யா கொடுக்கும் என்று அதிபர் புதின் எச்சரித்திருந்தார்.
மேலும், தனது இறையாண்மையைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்த ரஷ்யா தயாராகஇருப்பதாகக் கூறியய அதிபர் புதின், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கு அணுஆயுத அச்சுறுத்தல்களையும் விடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் உக்ரைனில் போரில் காயமடைந்த ரஷ்ய இராணுவ வீரர்களை மாஸ்கோவில் சந்தித்த அதிபர் புதின், அணுஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் ஆற்றலுடைய அணுசக்தியால் இயங்கும் (Poseidon) போஸிடான் என்ற நீருக்கடியில் செல்லும் ட்ரோன் சோதனை வெற்றிபெற்றதாகத் தெரிவித்திருந்தார்.
வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படுவதை விட 100 மடங்கு சிறிய ஒரு சிறிய அணு உலையில் இருந்து இந்த ட்ரோன் இயங்கும் என்று விவரித்த அதிபர் புதின், அளவு சிறியதாக என்றாலும் இதன் ஆற்றல் அளவிட முடியாதவை என்றும், எதிரியின் கடற்கரையில் அணுசக்தியால் சுனாமியை உருவாக்கும் என்றும் எச்சரித்திருந்தார்.
பண்டைய கிரேக்க கடற் கடவுளின் பெயருடைய இந்த அணுசக்தி ட்ரோன் ரஷ்யாவின் பெல்கோரோட் ரக நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் எந்த ஒரு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாகும். சுமார் 20 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் விட்டம் மற்றும் 100 டன் எடை கொண்ட இது மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் நீருக்கடியில், கிட்டத்தட்ட எந்தக் கடலிலும் அதன்எல்லைவரை சென்று தாக்கக் கூடியதாகும். எனவே இதை இடைமறித்து அழிக்கும் என்பது சாத்தியமே இல்லை என்று கூறப்படுகிறது.
நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவுப்படும் இந்த Poseidon போஸிடான் ,இரண்டு அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் வலிமை கொண்டதாகும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, அணுசக்தி தொழில்நுட்பத்தில், குறிப்பிடத் தக்க முன்னேற்றமாக அணுசக்தியால் இயங்கும் பியூரெஸ்ட்னிக் (Burevestnik0 குரூஸ் ஏவுகணை சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி இருந்தது.
அணுசக்தியைப் பயன்படுத்தி 14,000 கிலோ மீட்டர் தூரத்தை 15 மணி நேரம் தொடர்ச்சியாகப் பறந்து இலக்கை துல்லியமாகத் தாக்கியது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய க்ரூஸ் ஏவுகணை 1,000 மடங்கு சிறியது என்றாலும் இது ஒரு மினியேச்சர் அணுஉலை என்று ரஷ்ய அதிபர் விவரித்திருந்தார். வழக்கமான ஏவுகணைகளைப் போல் அல்லாமல், இந்தப் புதிய ஏவுகணையால் பல நாட்கள் வான்வெளியிலேயே இருக்க முடியும் என்றும், காலவரையின்றி அலைந்து திரிந்து எந்தத் திசையிலிருந்தும் கணிக்க முடியாதபடி எதிரியின் வான் எல்லைக்குள் திடீர் என்று தாக்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்மூலம் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் போர்க் கப்பல்களில் இருந்து வான்வழியாகச் செலுத்தும் ஏவுகணைகள் என அனைத்தும் ஒரே நேரத்தில் எதிரிகளை தாக்கி அழிக்கும் அணுசக்தி வல்லமையை ரஷ்யா மேம்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குமாறு அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள உள்ளது. 1992ம் ஆண்டு கடைசியாக அமெரிக்கா அணுஆயுத சோதனை செய்தது. 1990ஆம் ஆண்டு, ரஷ்யா அணுஆயுத சோதனையை நடத்தியது. 1996ம் ஆண்டில் கடைசி முறையாக அணுஆயுத சோதனையை சீனா நடத்தியது. சர்வ தேச அளவில், அதிகமான அணுஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அணு ஆயுத ஏவுகணைகளை சோதிப்பதற்குப் பதிலாக உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதிபர் புதின் முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அதிபர் ட்ரம்ப், உலகின் மிகப்பெரிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்க வைத்திருப்பதாகவும், அது ரஷ்ய கடற்கரையிலே இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
முன்னதாகக் கடந்த செப்டம்பரில் நடந்த ராணுவ வெற்றி அணிவகுப்பில், கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கக்கூடிய ஐந்து அதிநவீன ஏவுகணைகளை சீனா அறிமுகப் படுத்தி இருந்தது. அமெரிக்காவும், ரஷ்யாவும், சீனாவும் ஒரு பேரழிவைத் தரக்கூடிய அணு ஆயுதப் போட்டியைத் தவிர்க்குமா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலையே சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அணுஆயுத போட்டியில் அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும் சீனாவும் ரஷ்யாவும் வேகமாக முன்னேறுகிறது. இப்போதைக்கு இன்னும் போர் முடியவில்லை என்று சொல்வதை விட இன்னும் போர் தொடங்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்யா, சீனா அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் மீண்டும் அணுசக்தி போட்டியில் இறங்கியுள்ளன. தொடர்ச்சியான சோதனைகள் உலகளாவிய ஆயுதப் போட்டி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
			 
                    















