நாடாளுமன்றத்தில் பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் ராகுல்காந்தி வெளிநாடுகளில் இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதிக்க பாஜக அரசு அனுமதிப்பதில்லை என வெளிநாடுகளில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறிவருவது முற்றிலும் தவறானது என கூறினார்.
ஒவ்வொரு கட்சிக்கும் விகிதாசார அடிப்படையில் நேரம் வழங்கப்படுவதாகவும், அதன்படி காங்கிரசுக்கு 10 சதவீதம் கூடுதல் நேரம் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு பேச நேரம் கொடுக்கும்போதெல்லாம், ராகுல் காந்தி வெளிநாடுகளில் உள்ளதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பீகார் சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களுக்கு மேல் கைப்பற்றி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுவது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்ட அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு, லட்சக்கணக்கான இளைஞர்களிடம் தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்பை விதைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அடல் பிஹாரி வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகியோர் இந்த நாட்டின் பிரதமர்களாகி உள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
















