பீகார் தேர்தலில் வெற்றி பெறாமல் மாஸ்கை கழற்ற மாட்டேன் எனச் சபதம் எடுத்திருந்த பிளூரல்ஸ் கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி நெட்டிசன்களின் ட்ரோலுக்கு ஆளாகியுள்ளார்.
பீகாரின் ஜேடியு கட்சியின் முன்னாள் எம்எல்ஏ வினோத் குமார் சவுத்ரியின் மகள் புஷ்பம் பிரியா சவுத்ரி. லண்டன் பொருளாதாரப் பள்ளி மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற புஷ்பம் பிரியா, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதாக உறுதியளித்து கடந்த 2020-ல் தி ப்ளூரல்ஸ் எனும் கட்சியை நிறுவினார்.
அந்த ஆண்டே அவரது கட்சி 148 இடங்களில் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு பீகார் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட புஷ்பம் பிரியா சவுத்ரி, கருப்பு நிற மாஸ்க்குடனேயே வலம் வந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே மாஸ்க்கை கழற்றுவேன் எனவும் அவர் கூறியிருந்தார். ஆனால் அவரது தி பிளூரல்ஸ் கட்சி 243 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்த நிலையில், ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாஸ்க்கை கழற்றாமலேயே பொதுவெளியில் புஷ்பம் பிரியா சவுத்ரி தோன்றுவாரா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
















