அமெரிக்க நாடாளுமன்றத்தில் எச்-1பி விசா திட்டத்தை நீக்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்யவுள்ளதாக, அந்நாட்டு பெண் எம்.பி.யான மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் 2-வது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல், எச் 1பி விசாவுக்கான கட்டுப்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எச்-1பி விசாவுக்கான கட்டணம் இந்திய மதிப்பில் 88 லட்சமாக உயர்த்தப்பட்டது.
எச்-1பி விசா திட்டத்தால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக டிரம்ப் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் எச்-1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் போவதாக டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.யான மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், எச்-1பி விசா திட்டத்தை அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதால் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஓரம் கட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தனது மசோதா ஊழல் நிறைந்த எச்-1பி திட்டத்தை நீக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் அதிபர் டிரம்ப், எச்-1பி விசா தொடர்பான தனது கருத்தில் இருந்து பின்வாங்கி, அமெரிக்காவுக்கு திறமையான வெளிநாட்டு பணியாளர்கள் தேவை எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
















