பாகிஸ்தானுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை சீனா வழங்கும் நிலையில், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இது பிராந்திய கடல் சமநிலையை கெடுக்கும் பாகிஸ்தானின் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
சீனா உடனான 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் 8 ஹேங்கர் ரக டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் 2015-ல் கையெழுத்தான நிலையில், 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவிலும், நான்கு பாகிஸ்தானிலும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆப்ரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் ராணுவ தளவாடங்கள் பல்லைக் காட்டிய நிலையில், குளோபல் டைம்ஸ்-க்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு இருநாடுகள் உறவில் புதிய மைல் கல் என்று கூறியிருந்தார்.
மே மாதத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் மண்ணை கவ்விய பாகிஸ்தான், அதன் பின்னர் கடற்படையை வலுப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது… இந்த நிலையில், இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் வத்சாயன், இந்தியாவின் கடல் எல்லையை பாதுகாக்க, கடற்படை எப்போதும் தயாராக உள்ளதாகக் கூறினார். சீனா பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் வழங்குவதை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார். பாகிஸ்தான் கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் விரைவில் சேர்க்கப்படும் என்று நம்புவதாகக் கூறிய அவர், அதை எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்த்துறையில் நமக்கு என்னென்ன திறன்கள் தேவை என்பதை இந்திய கடற்படை அறியும் என்று கூறினார்.
தற்போது இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களும், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பல டீசல் மின்சார தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. கடற்படையில் நவீன போர்க்கப்பல்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட வைஸ் அட்மிரல், சீனா ஃபுஜியன் விமானம் தாங்கிக் கப்பலை இணைத்த போதிலும், இந்தியா கடல்சார் வலிமையை தக்க வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
சீனாவை பொறுத்தவரை, அவர்களது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் வந்துவிட்டது.. எனினும், இந்தியாவில் கட்டுமானத்தில் உள்ள கப்பல்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் என்றும், இது இந்திய கடற்படையை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் கடற்படையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சேர்க்கப்படுவது ஒருவகையில் இந்தியாவுக்கு சவால் விடும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
















