தமிழகத் தோட்டக்கலைத்துறையின் கீழ் குறிப்பிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் எங்கே போயிற்று? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடந்த ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், தோட்டக்கலை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கும் நோக்கில் தமிழகத்திற்கு ரூ.136 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் திமுக அரசு கணிசமானத் தொகையைக் கையாடல் செய்துவிட்டதாகவும் வெளிவரும் செய்திகள் மூலம் திமுகவின் ஊழல் மகுடத்தில் இது மற்றொரு கருங்கல்லாகவே தெரிகிறது. தோட்டக்கலைத்துறை குறித்தெல்லாம் யார் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்ற அலட்சியத்தில் திமுக அரசு தனது ஊழல் கரங்களை அதில் பரவவிட்டுள்ளதாகத் தெரிகிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக அதிகாரிகளுக்கு உணவு கொடுத்தோம், தேநீர் வழங்கினோம், போக்குவரத்திற்கு உதவினோம் என்று கூறி போலிக் கணக்கு காட்டி ரூ.75 கோடியையும், தென்னை வேர் வாடல் நோய் தடுப்புப் திட்டத்தின் கீழ் ரூ.60 கோடியையும், தேனீ வளர்க்கிறோம், மகரந்தச் சேர்க்கை செய்கிறோம் என்று கூறி டெண்டரே விடாமல் ரூ.6 கோடியையும் அரசு ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கும் பொழுது, முதல்வரும் வேளாண்மைத் துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அவர்களும் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத் தோட்டக்கலைத்துறையின் கீழ் குறிப்பிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் எங்கே போயிற்று? வாய் வலிக்குமளவிற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்ற போலி வதந்தியை மக்களிடையே பரப்பிவரும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் கனத்த மௌனம் காப்பது ஏன்? பதவிக்காலம் முடிவதற்குள் பாதாளம் வரை சென்று கொள்ளையடித்துவிடத் துடிக்கும் திமுகவின் ஊழல் வரலாறு நமக்குத் தெரியாதா என்ன? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
எனவே, வழக்கம்போல வெள்ளை பேப்பரைத் தூக்கிக் காட்டி உருட்டாமல் தோட்டக்கலைத் துறையின் செலவினங்கள் மற்றும் டெண்டர் நடைமுறைகள் குறித்து விரிவான வெள்ளையறிக்கையை உடனே வெளியிட வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
















