அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் சுங்க வரியை உடனடியாக நீக்க வலியுறுத்தி, அந்நாட்டுக்கு திருத்தப்பட்ட ‘இறுதி’ வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட விவகாரங்களை மையமாகக் கொண்டு, இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதை காரணம் காட்டி, இந்திய இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தது.
இதனால் மொத்தமாக இந்திய இறக்குமதி பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. இந்த வரி உயர்வை நீக்க இந்தியா தீவிர முயற்சிகள் மேற்கொண்டு, சுங்க சலுகைகள் உள்ளிட்ட சமரச முன்மொழிவுகளை முன்வைத்தாலும், அமெரிக்காவின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகாததால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையின்போதும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடர்பாக அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் சுங்க வரியை நீக்குவது குறித்து, இந்தியா தீவிரமாக வலியுறுத்தியது. அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதியான ரிக் ஸ்விட்சர் தலைமையிலான குழுவுடன் நடந்த இந்தச் சந்திப்பில், வால்நட், பாதாம், ஆப்பிள் உள்ளிட்ட சில அமெரிக்க பொருட்களின் இறக்குமதி சுங்க வரிகளை உடனடியாக நீக்கத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்தது. ]
அத்துடன் 25 சதவீத கூடுதல் வரி ஏற்றுமதியாளர்களை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்க கூடுதல் வரிச்சுமையை அரசே ஏற்றுக்கொள்வதால் லாபம் கடுமையாகக் குறைந்து வருவதாகவும் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சலுகைகள் விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மட்டுமே பார்க்கப்படும் எனவும், பிற வரி தளர்வுகள் குறித்து அரசியல் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என்றும் அமெரிக்க குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ]
இந்தச் சூழ்நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு திருத்தப்பட்ட ‘இறுதி’ வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை காரணம் காட்டி அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் சுங்க வரியை நீக்குவதே, இந்தியாவின் முதன்மை இலக்காக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]
அரசு தரவுகளின்படி அமெரிக்கா அபராத வரியை விதிக்கும் முன்பே இந்தியா, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை கணிசமாகக் குறைத்திருந்தது. இந்நிலையில், அபராத வரி விதிப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்தியா தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவின் மற்றொரு அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான ஜேமிசன் கிரியர், இந்தியா சவாலான நாடு என்றாலும், இதுவரை கிடைத்த சிறந்த சலுகைகள் இந்தியாவிடமிருந்தே வந்துள்ளதாகச் செனட் சபையில் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து பெரும்பாலான உறுப்பினர்கள் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தத்தில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை மையமாகக் கொண்ட இந்தச் சுங்க வரி விவகாரம், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை முக்கியமான கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஏற்றுமதியாளர்களின் அழுத்தம் மற்றும் பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு, 25 சதவீத கூடுதல் அபராத வரியை நீக்குவதையே இந்தியா தனது பிரதான கோரிக்கையாக முன்வைத்துள்ள நிலையில், இரு நாடுகளின் நீண்டகால வர்த்தக மற்றும் மூலோபாய உறவுகளை கருத்தில் கொண்டு அமெரிக்கா சமரச முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
















