தமிழகத்தில் எந்தவொரு புதிய திட்டங்களையும் திமுக அரசு கொண்டு வரவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களாலும், போதை பொருட்களாலும், வன விலங்குகளின் அட்டூழியங்களாலும் சிதைந்து போயுள்ளதாக தெரிவித்தார்.
தங்களது பூர்வீகப் பெருமைகளைத் தாங்கி நிற்கும் மண், திமுக அரசின் மோசமான ஆட்சியால் தங்கள் கண்முன்னே பாழாய்ப்போவதை இனி கிருஷ்ணகிரி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களிலும் 60 % மத்திய அரசின் பங்கு உள்ளது என்றும், ரேசன் கடைகளுக்கு அனைத்து பொருட்களையும் மத்திய அரசு தான் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பிய நயினார், ரூ.1,500 மதிப்புள்ள யூரியாவை மத்திய அரசு விவசாயிகளுக்காக ரூ.300-க்கு கொடுப்பதாகவும் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 30,000 இலவச வீடுகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்றும், ஆட்சி காலத்தில் திமுக எந்தவித புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்றும் அவர் சாடினார்.
மத்திய அரசின் உதவியால் இபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்ததாகவும், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடையும் என்றும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
















