காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பாஜகவையும் புகழ்ந்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு கவனம் பெற்று வருகிறது. அதே சமயம், அந்தப் பதிவு காங்கிரஸில் நிலவும் சர்வாதிகார தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையிலும் அமைந்துள்ளது. அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மாநிலங்களவை உறுப்பினருமாகவும் இருந்து வருபவர் திக்விஜய் சிங். இவர் கடந்த வாரம் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்த அவர், அதன் அவசியத்தையும் சுட்டி காட்டியிருந்தார்.
இந்நிலையில், திக்விஜய் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு காங்கிரஸ் கட்சிக்குள்ளும், அரசியல் வட்டாரத்திலும் தற்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி தரையில் அமர்ந்திருந்தார்.
இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள திக்விஜய் சிங், இந்தப் படம் மிகவும் கவரும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவகராகவும், ஜனசங்கத்தின் தொண்டராகவும் இருந்த நரேந்திர மோடி, அந்தப் புகைப்படத்தில் தலைவர்களின் காலடியில் அமர்ந்திருப்பதை அவர் சுட்டி காட்டியுள்ளார்.
அந்த நிலையில் இருந்து உயர்ந்து, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், பின்னர் நாட்டின் பிரதமராகவும் மோடி உயா்ந்துள்ளதையும் திக்விஜய் சிங் தனது பதிவில் கோடிட்டு காட்டியுள்ளார். இது, ஒரு அமைப்பின் வலிமையை வெளிப்படுத்துகிறது எனக்கூறி, ஆர்எஸ்எஸ்-ஐயும், பாஜகவையும் அவர் பாராட்டியுள்ளார்.
பாஜகவில் உழைப்பவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவமும், உரிய அங்கீகாரமும் வழங்கப்படுகிறது என்பதுதான், தனது பதிவின் மூலம் திக்விஜய் சிங் சொல்ல வரும் செய்தி. அவர் யாருக்கு இந்த செய்தியைச் சொல்கிறார் என்ற கேள்வி எழலாம். அவரது பதிவிலேயே அதற்கான பதில் உள்ளது. தனது பதிவில் அவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரை டேக் செய்துள்ளார்.
இப்படி காங்கிரசின் மேலிடத்தை டேக் செய்து, பாஜகவையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் திக்விஜய் சிங் புகழ்ந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் செய்தி தொடர்பாளரான சி.ஆர். கேசவன், திக்விஜய் சிங்கின் இந்தப் பதிவு எதேச்சதிகாரம் மற்றும் ஜனநாயக விரோதம் கொண்ட காங்கிரஸ் தலைமையை அம்பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ராகுல் காந்தியின் குடும்பம் எவ்வாறு கட்சியை இரக்கமின்றி சர்வாதிகார முறையில் நடத்துகிறது என்பதையும், கட்சி தலைமை எவ்வளவு எதேச்சதிகாரத்தோடு நடந்துகொள்கிறது என்பதையும் இந்தப் பதிவு தெள்ளதெளிவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திக்விஜய் சிங் போட்டுள்ள இந்த வெடிகுண்டை ராகுல் காந்தி தைரியமாக எதிர்கொள்வாரா எனவும், சி.ஆர். கேசவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திக்விஜய் சிங்கின் ராஜ்யசபா பதவி காலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிவுக்கு வருகிறது. அவருக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட வாய்பில்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில், கமல்நாத் மற்றும் மீனாட்சி நடராஜன் இருவரும் ஏற்கனவே மாநிலங்களவை பதவிக்கான ரேஸில் உள்ளனர். மேலும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர் உமாங் சிங்கரும் திக்விஜய் சிங்கிற்கு எதிரான போக்கையே கடைபிடித்து வருகின்றனர்.
இந்த சூழலில்தான், திக்விஜய் சிங்கின் இந்த எக்ஸ் பதிவு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும், காங்கிரசில் நிலவும் குடும்ப அரசியல் குறித்த நேர்மையான கருத்தாகவே திக்விஜய் சிங்கின் பதிவு கருதப்படுகிறது. நாடு முழுவதும் ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசி வருகிறார். ஆனால், சொந்த கட்சிக்குள்ளேயே அவர் அந்த ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்கு மேலும் ஆதாரமாக திக்விஜய் சிங்கின் இந்த அதிருப்தி பதிவு அமைந்துள்ளது.
















