தேர்தல் என்று வந்துவிட்டாலே அரசியல் கட்சித் தலைவர்களோடு, அவர்கள் பயன்படுத்தும் பிரச்சார வாகனங்களும் அதிகளவு பேசுபொருளாகி விடுகின்றன. அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிது புதிதாகத் தயாரிக்கப்படும் பிரச்சார வாகனங்கள் குறித்தும், அதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு வசதிகள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ எந்தத் தேர்தலாக இருந்தாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் இறுதிகட்ட பிரசாரங்கள் தான் அவர்களுக்கான வாக்கு வங்கியை உறுதிபடுத்தும் சக்தியாக அமைந்துள்ளன.
அவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள், களைப்பின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதோடு, அவர்களுக்குத் தேவையான சகலவசதிகளும் அடங்கிய பிரச்சார வாகனங்களும் அண்மைக்கால தேர்தல்களில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும், அவரவர் விரும்பும் வகையிலான பணியில் கோவையைச் சேர்ந்த கோயாஸ் நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில், தற்போதே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்கான பிரச்சார வாகனங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
வாகனத்தில் அமர்ந்தபடியே வழிநெடுகிலும் தொண்டர்களை சந்திக்கும் வசதியும், வாகனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தபடி பிரச்சாரம் செய்யும் வசதியும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் தலைவர்கள் ஓய்வெடுக்க படுக்கை அறைகள், சக தலைவர்களுடன் அமர்ந்து ஆலோசனை செய்யத் தனி அறைகள், கழிவறை மற்றும் குளியலறைகள் என அனைத்து விதமான வசதிகளுடனும் இப்பேருந்துகள் வடிவமைக்கப்படுகின்றன.
வழக்கமான வசதிகளுடன் சேர்த்து இம்முறை, ஹைட்ராலிக் மேடை, இணைய சேவை, மினி டிவி, கணினிகள், ஒலிப்பெருக்கிகள், சிசிடிவி கேமிராக்கள் அடங்கிய வகையிலும் பிரச்சார வாகனத்தை தயாரிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் ஆர்டர்கள் கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு தேர்தலிலும் அதிகளவில் பேசப்படும் பிரச்சார வாகனங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பெருமளவு பேசப்படும் பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















