தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை ரவுடி கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் நமணசமுத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லவிருந்ததால் தீரஜ்குமார் கேட்டை மூடியுள்ளார்.
அப்போது, அங்கு வந்த ரவுடி கார்த்தி, அவசர வேலையாக செல்வதால் ரயில்வே கேட்டை திறந்துவிடுமாறு கேட் கீப்பருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ரவுடி கார்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியால் கேட் கீப்பரை தாக்கியுள்ளார். தீரஜ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் கார்த்தியை சுற்றிவளைத்து பிடித்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், தீரஜ்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரவுடி கார்த்தியை கைதுசெய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















