ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மற்றும் பயங்கர வாத பயிற்சி முகாம்கள் அனைத்தையும் இந்தியா தாக்கி தரைமட்டமாக்கியது. சுமார் 100க்கும் அதிகமாக பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பதிலுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவிய அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து இந்தியா சுட்டு வீழ்த்தியது.
மேலும் பாகிஸ்தானின் நூர் உட்பட முக்கிய விமானப் படை தளங்களையும் இந்தியா தாக்கி சுக்கு நூறாக்கியது.
இந்தியாவின் தாக்குதலைக் கண்டு அஞ்சி நடுங்கிய பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்துமாறு இந்தியாவிடம் கெஞ்சியது. இந்தியாவும் தற்காலிகமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தி வைத்தது.
இதற்கிடையே தான் இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறினார். இதுவரை சுமார் 70 முறைக்கும் மேலாக இதே பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர்.
இந்தச் சூழலில், அமெரிக்க வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஆவணங்கள், ஆப்ரேஷன் சிந்தூரின் போது அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அவசர உதவிக்காக கெஞ்சியதை அம்பலப் படுத்தியுள்ளன.
இதற்கு கைம்மாறாக அமெரிக்காவுக்கு அதிக முதலீடுகள் மற்றும் நாட்டிலுள்ள முக்கிய கனிம வளங்களை வழங்கவும் பாகிஸ்தான் முன்வந்ததாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளை 50-க்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இதற்காகச் சுமார் 5 மில்லியன் டாலர் செலவில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, பென்டகன் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க எம்பிக்களுடன் 50க்கும் மேற்பட்ட சந்திப்புகளைப் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
அமெரிக்க அரசு அதிகாரிகள், மற்றும் லாபியிஸ்ட்கள் சந்திப்புகள் மட்டுமின்றி அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களில் நேர்காணல்கள் மற்றும் செய்தி கட்டுரைகள் வெளியிடவும் பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் PR செலவுகளை விட மூன்று மடங்கு அதிகம் செலவு செய்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது பாகிஸ்தான் அரசு.
வலுவான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் அமெரிக்காவும் இடம்பெற வேண்டும் என்றும், இந்தியா- பாகிஸ்தான் இடையே மூன்றாவது நாடாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவேண்டும் என்றும், அப்போதுதான் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமாக ஒப்பந்தம் ஏற்பட முடியும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியதாக வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தாலிபான்களிடமிருந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கெஞ்சியதாக ஆவணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக, 13 அமெரிக்க வீரர்களைக் கொன்ற (Abbey Gate) அபே கேட் என்ற ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாதியைக் கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியதன் மூலம், தனது நிலை பாட்டையும் பாகிஸ்தான் நிரூபித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தாக்குதலை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்’ என்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கதறியது தற்போது தெரியவந்துள்ளது. ஆனாலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதம், இந்தியா -பாகிஸ்தான் போரின் போது, அதிபர் ட்ரம்ப் சமரசம் பேசவில்லை என்று பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார் தெரிவித்திருந்தார். மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியா மூன்றாம் நாட்டு தலையீட்டை விரும்பவில்லை என்று தம்மிடம் கூறியதாக இஷாக் டார் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதன் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கெஞ்சவில்லை; பாகிஸ்தான் தான் அமெரிக்காவிடம் கெஞ்சியது என்பது உறுதியாகியுள்ளது.
















