ஈரானில் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களுக்காக தொடங்கிய போராட்டம் இஸ்லாமிய அரசுக்கு எதிரான போராட்டமாக தீவிரமடைந்துள்ளது. ஈரான் அரசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா ?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே ஈரான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் ஏற்பட்ட போரின் விளைவாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
பணவீக்கம் 52 சதவீதமாக உள்ள நிலையில் ஒரு அமெரிக்க டாலருக்கு ஒன்றரை லட்சம் ரியால் என்ற அளவில் ஈரானின் நாணய மதிப்பு சரிந்தது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், உச்சத் தலைவர் அதயத்துல்லா அலி கொமேனி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும், அந்நாட்டு மக்கள் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2,270-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இளவரசர் ரேசா பஹ்லவி ஷா போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, தலைநகர் தெஹ்ரான் உட்பட நாடு முழுவதும் மக்கள் லட்சக்கணக்கில் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வாதிகாரிக்கு மரணம், இஸ்லாமியக் குடியரசுக்கு மரணம் என்று மத அடக்குமுறை இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக முழக்கங்கள் எங்கும் எதிரொலித்தன. இதுவே கடைசிப் போர்! பஹ்லவி திரும்புவார்!” என்றும் ஷாவுக்கு ஆதரவாகவும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் ஈரானில் இணைய சேவையும், தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப் பட்டன.
ஈரான் அரசு இணைய மற்றும் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தது போல் சாட்டிலைட் தகவல் தொடர்பையும் துண்டிக்கும் என்று கூறியுள்ள பஹ்லவி, ஈரான் மக்களின் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவளித்தது போல, ஐரோப்பிய நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று கூறிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அமைதியாகப் போராடும் மக்களைக் கொன்றால், ஈரான்மக்களுக்குத் துணையாகக அமெரிக்கா களம் இறங்கும் என்று ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் உட்பட உலகம் முழுவதும்உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு அமெரிக்க துணை நிற்கும் என்று துணை அதிபர் ஜேடி வான்ஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.
















