உக்ரைன் மீது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணையை ஏவி ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையில், இது குறித்துப் பேசிய அமெரிக்காவின் துணைத் தூதர் டாமி புரூஸ், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்கு ரஷ்யாவின் இந்தச் செயல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். அமைதியை நிலைநாட்ட அதிபர் ட்ரம்ப் இணையற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் வேளையில், ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் போரை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
ரஷ்யா நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதலானது, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள போலந்து நாட்டின் எல்லைக்கு மிக அருகில் நிகழ்ந்துள்ளதை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினின் இல்லம் ஒன்றின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாகவே ‘ஒரேஷ்னிக்’ ஏவுகணையைப் ரஷ்யா பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
















