காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே வெளியேறும் என எதிர்பார்த்து காத்திருந்த திமுகவினர் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி அதிக இடத்தில் போட்டி, ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது.
தமிழக மக்களுக்கென தாங்கள் கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற ஆட்சியில் பங்கு அவசியம் என காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
பீகாரில் படுதோல்வியை தழுவியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைத்து வழங்கிட திமுக தலைமை முடிவெடுத்திருக்கும் நிலையில், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு திமுகவை மேலும் கொந்தளிப்படையச் செய்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி, மாணிக்கம் தாகூர், ஆகியோருடன் இரண்டாம் கட்டத் தலைவர்களும் அதிக இடங்களில் போட்டி மற்றும் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை தீவிரப்படுத்தியதால் திமுகவினரும் சமூக வலைதளங்களில் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரண்டு கட்சிகளுக்கும் இடையே சமூகவலைதளங்களில் போர் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்து ஆலோசனை நடத்தியது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளனர்.
திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவது தற்கொலைக்கு சமம் எனவும், தவெக எனும் குழந்தைக் கட்சியை நம்பி திமுகவை விட்டு வெளியேறினால் காங்கிரசுக்கு தான் பாதிப்பு என சில தலைவர்கள் பேசியுள்ளனர்.
மேலும் இந்திய அளவில் இருக்கும் காங்கிரஸ் இயக்கம், இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெகவுடன் கூட்டணி வைப்பதா ? எனவும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தவெக புதுக் கட்சியாக இருந்தாலும் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருக்கும் நிலையில், துளியளவும் மரியாதை தராத திமுகவை விட்டு வெளியேறுவது தான் காங்கிரஸ் எதிர்காலத்திற்கு சரியாக இருக்கும் எனவும் சிலர் கூறியுள்ளனர்.
திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை மிகவும் மோசமாக நடத்துவதாகவும், கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை கூட தற்போது பெறுவது கடினம் என தெரிவித்த சில தலைவர்கள், தவெகவுடன் இணைந்தால் 60 தொகுதிகள் வரை பெறலாம் என ஆலோனையும் கூறியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் போலவே அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்தால் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், பொதுவெளியில் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு வாய் பூட்டு போடப்பட்டுள்ளது.
கேரளத்தின் திருவனந்தபுரம், மகாராஷ்டிராவின் மும்பை என அடுத்தடுத்து, பாஜக தன் வெற்றி முத்திரைகளை பதித்து வரும் நிலையில், மறுபுறம் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு தானாகவே வெளியேறும் என எதிர்பாத்திருந்த திமுகவினருக்கும் டெல்லி மேலிட அறிவிப்பு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரர் என்ற மனப்பான்மையில் இருப்பதால் திமுக – காங்கிரஸ் கூட்டணி விரைவிலேயே உடைந்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்
















