ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பொருளாதார நெருக்கடியை வென்று இந்தியா முன்னேறுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
உலக வளர்ச்சியில் தவிர்க்க முடியாத இடத்தில் இந்தியா உள்ளதாக கூறிய அவர், எதிர்க்கட்சிகளின் தரம் தாழ்ந்த செயல்பாடுகள் தனக்கு கவலையை அளிப்பதாக வேதனை தெரிவித்தார்.
அதேபோல் இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் மிக மோசமாக நடந்து கொள்வதாகவும் அவர் விமர்சித்தார்.
இந்தியாவின் வளர்ச்சி குறித்து காங்கிரஸ் கட்சிக்கு கவலையில்லை என்று கூறிய அவர், கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் நிர்வாக திறமையின்மை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து ராஜிவ்காந்தி ஆட்சியின் போபர்ஸ் பீரங்கி ஊழலை குறிப்பிட்டு பேசிய அவர், எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை டீல் என்றாலே அது போபர்ஸ்தான் என விமர்சித்தார்.
மேலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, தங்கள் சொந்த பைகளை நிரப்புவதற்காகவே அந்த கட்சிகள் உழைத்ததாக விமர்சித்தார்.
முன்னதாக பிரதமர் மோடி பேச ஆரம்பித்தபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது வந்தார்கள், சென்றார்கள் என பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரை விமர்சித்தார்.
















