சிவகங்கையில் தனது வார்டில் தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது என திமுக நகர்மன்ற உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை நகராட்சி 21-வது வார்டின் கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த அயுப்கான் பதவி வகித்து வருகிறார். இந்தப் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும்போது, தாங்கள் வருவதை உணர்த்த விசில் ஊதுவது வழக்கம்.
இதனிடையே, தவெக-விற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், தன் வார்டு பகுதிக்குள் தவெக-வின் சின்னமான விசில் சத்தம் ஒலிக்கக் கூடாது என முடிவு செய்த கவுன்சிலர் அயூப்கான். தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்த தடை விதித்தார்.
தொடர்ந்து, அவர்களுக்கு ஒலிபெருக்கி ஒன்றையும் வழங்கி, அதன் மூலம் அறிவிப்பு செய்து குப்பைகளைச் சேகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்தை தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
















