இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளைப்போல் இதுவரை பார்த்ததில்லை என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக இண்டி கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்பதால் மூத்த உறுப்பினர் ஜகதாம்பிகா பால் தலைமையில் விவாதம் நடைபெற்றது.
அப்போது, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ஆவேசமடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் உண்மையை திரித்துக் கூறுவதாக குற்றம்சாட்டியதுடன், இத்தகைய பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளை இதுவரை பார்த்ததில்லை என்றும் ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து, அவையை முடக்குவதையே எதிர்க்கட்சிகள் நோக்கமாகக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓம் பிர்லா அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி வருவதாகவும், அவர் பாரபட்சமாக செயல்படுவதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்தார்.
இவ்வாறாக மக்களவையில் விவாதமானது காரசாரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பில்லாத நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 உறுப்பினர்களுடன் வலுவாக உள்ளதால், இந்த தீர்மானம் தோல்வியடையவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும், சபாநாயகர் குறித்து பொதுவெளியில் தேவையற்ற விவாதத்தை உருவாக்கவே எதிர்க்கட்சிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
















