திமுக – விசிக இடையே தொகுதி பங்கீடு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் 8 தொகுதிகள் வழங்கப்படுவதாக உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்த விசிக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.
ஆனால் குறைவான தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக முன்வந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தனது நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே திமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த அவர் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இறுதியில் 8 தொகுதிகளை வழங்குவதாக திமுக தெரிவித்த நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட திருமாவளவன் தொகுதி பங்கீட்டு படிவத்தில் கையெழுத்திட்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக இம்முறை கூடுதலாக 2 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது, அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மதிமுகவிற்கு 4 தொகுதிகளும், விசிகவுக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
















