திமுகவின் நான்கு அதிகார மையத்தை வீழ்த்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து, மயிலாப்பூர் தொகுதியில் கூட்டணி கட்சிகளுக்கான முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியை பார்க்க பரிதாபமாக உள்ளதாகவும், கூட்டணியை அமைக்கவே திமுக போராடுவதாகவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் பதறிக்கொண்டிருப்பதாகவும், என்டிஏ கூட்டணியில் தலைவர்கள் சுதந்திரமாக இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கரெப்சன், கலெக்சன், கமிஷன் இதுதான் திமுகவின் தாரக மந்திரம் எனவும், திமுகவில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஆகிய நான்கு அதிகார மையங்களை வீழ்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனவும், இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் திமுக அரசு முதலிடம் என்றும் விமர்சித்தார்.
















