சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கிறது எனச் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்திய- சீன எல்லை பிரச்சனையில் அமெரிக்க உள்ளிட்ட எந்த ஒரு நாடும் தலையிடுவதை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சீனாவின் இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்’ Military and Security Developments Involving the People’s Republic of China என்ற தலைப்பில், இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு அறிக்கையை அமெரிக்க பாதுகாப்புத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், சீனாவின் இராணுவ திறன்கள், பாதுகாப்பு வியூகங்கள் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2049-ஆம் ஆண்டுக்குள் ‘சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை அடைவதே சீனாவின் தேசிய வியூகமாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுடனான சீனாவின் உறவுகள் குறித்தும் சீனாவுடனான பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்து வருவது பற்றியும் இந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதற்றம் குறைந்துள்ளதால் இந்தியாவுடனான உறவுகளைச் சீனா மேம்படுத்தி வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையேயான சந்திப்புக்கு முன்பாகவே இருநாடுகளுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைச் சுட்டிக் காட்டியுள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிக்கை, ஷி ஜின்பிங் – மோடி சந்திப்புக்குப் பிறகு இரு நாடுகளும் மாதந்தோறும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகக் கூறியுள்ளது. இதன் விளைவாக எல்லையில் பதற்றம் குறைந்துள்ளது என்றும் நேரடி வேமனச் சேவையும் தொடங்கப் பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சீன கம்யூனிச கட்சியின் கட்டுப்பாடு, சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள் மற்றும் சீனாவின் இறையாண்மை மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளுக்கு உரிமை ஆகிய விஷயங்களில் சீனா உறுதியாக இருக்கிறது என்று கூறியுள்ள அறிக்கையில் பரஸ்பர அவநம்பிக்கையே இருநாடுகளுக்கும் இடையே நிலைத்த சுமூகமான உறவுகள் ஏற்படாமல் தடுக்கின்றன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், ஐந்தாம் தலைமுறை FC-31, நான்காம் தலைமுறை J-10C பல்நோக்கு போர் விமானம் மற்றும் JF-17 இலகுரக போர் விமானம் உள்ளிட்ட போர் விமானங்கள் மற்றும் எட்டு யுவான்- ரக நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் என மேம்பட்ட பாதுகாப்பு ஆயுதங்களைப் பாகிஸ்தானுக்குச் சீனா வழங்கியுள்ளதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020-ல் கையெழுத்திடப்பட்ட சீனா-பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்பந்தத்தையும் அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் அறிக்கைக்குச் சீனா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், பென்டகனின் அறிக்கை சீனாவின் பாதுகாப்புக் கொள்கையை திரிக்கும் வகையில் உள்ளது என்றும், சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை உருவாக்குகிறது என்றும் கூறியுள்ளார்.
இந்திய சீன எல்லை பிரச்சனையில் எந்த ஒரு நாடும் தலையிடுவதை சீனா வன்மையாகக் கண்டிப்பதாகவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் முரண்பாடுகளை அமெரிக்கா உருவாக்குகிறது என்றும், இந்தியாவுடனான எல்லை நிலைமை நிலையானது என்றும் குறிப்பிட்ட லின் ஜியான், அமெரிக்கா தனது ராணுவ மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு சாக்குப்போக்கைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
சீனா இந்த அறிக்கையை உறுதியாக எதிர்க்கிறது என்றும், சீனா-இந்தியா உறவுகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில்அமெரிக்காவின் அறிக்கை உள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
















