அண்மையில் ஜெர்மனி சென்றிருந்த ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்தது. கூட்டத் தொடரின் இறுதி நாட்களில் இரு அவைகளிலும் முக்கிய விவகாரங்கள் குறித்த விவாதம் அனல் பறந்தது. குறிப்பாக, 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், அணுசக்தி மசோதா உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றன. அந்தச் சமயத்தில் எதிர்க்கட்சிகளின் தரப்பில் இருந்து வலுவான வாதங்களை முன்வைத்திருக்க வேண்டிய ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் இல்லை. ஏன்? இந்தியாவிலேயே இல்லை.
மாறாக, ஜெர்மனிக்கு சென்ற அவர், அங்குள்ள BMW தொழிற்சாலையில் மிக மும்முரமாக வாகனங்களை பார்வையிட்டபடி இருந்தார். மேலும், அங்கிருந்த வாகனங்களில் அமர்ந்தபடி புகைப்படங்களை எடுத்தபடியும் இருந்தார். ராகுல் காந்திக்கு அரசியலில் சுத்தமாகவே ஆர்வம் இல்லை எனவும், காட்டாயத்தின்பேரில்தான் அவர் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் அப்போது பலர் கருத்து தெரிவித்தனர்.
அவரை பகுதிநேர அரசியல்வாதி எனவும் பாஜகவினர் கிண்டலாக அழைக்கத் தொடங்கினர். இந்தச் சூழலில், இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுடன் கரம் கோர்ப்பதற்காகத்தான் ராகுல் காந்தி ஜெர்மனி சென்றிருந்ததாகத் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாம் பிட்ரோடா அண்மையில் அளித்த பேட்டிதான், இந்தக் குற்றச்சாட்டுக்கு வித்திட்டது. உலகளாவிய முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பின் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும், அந்த அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே ராகுல் காந்தி ஜெர்மனி சென்றிருந்ததாகவும் சாம் பிட்ரோடா நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
அப்போது, உலகளாவிய முற்போக்கு கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான தொடர்புகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ராகுல் காந்தி அந்த அமைப்பில் அங்கம் வகிப்பதாகவும், தானும் அதில் உறுப்பினராக இருப்பதாகவும் விளக்கம் அளித்தார். சாம் பிட்ரோடாவின் இந்த நேர்காணல் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உலகளாவிய முற்போக்கு கூட்டணி என்பது 2013ம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்ட அமைப்பாகும். உலகின் பல நாடுகளில் உள்ள இடதுசாரி மற்றும் இடதுசாரி பார்வையுள்ள கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்தச் சூழலில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி சுதான்ஷு திரிவேதி, இந்தியாவுக்கு எதிரான கட்டுக்கதைகளை ஊக்குவிக்கும் அமைப்புடன் உலகளாவிய முற்போக்கு கூட்டணி தொடர்புகொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய சதித்திட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினராகி விட்டதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். முற்போக்குவாதம் என்ற பதாகையின்கீழ் செயல்படும் வெளிநாட்டு நிதியுதவி பெற்ற அமைப்பு, இந்திய அரசியலில் வெளிப்படையாகச் செல்வாக்கு செலுத்துவதாகப் பாஜகவும் குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பிட்ட அந்த அமைப்புகளுடனான தொடர்பு எப்படி இத்தனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ள பாஜக, இதற்கு ராகுல் காந்தி பதிலளிப்பாரா என வினவியுள்ளது. ஜார்ஜ் சோரோஸ் என்பவருடன் தொடர்புடைய அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, கடந்த பிப்ரவரி மாதமே பாஜக செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா குற்றம்சாட்டியிருந்தார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசு சாரா நிறுவனங்களுக்கு அதிகப்படியான நிதி வழங்கப்பட்டதை சுட்டி காட்டிய அவர், நாட்டை பலவீனப்படுத்த வெளிநாட்டு சக்திகளுடன் ராகுல் காந்தி இணைந்து செயல்படுவதாகவும் விமர்சித்திருந்தார். இந்த சூழலில், உலகளாவிய முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் ராகுல் வெளிப்படையாக பங்கேற்றிருப்பது தற்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. மேலும், இதுவரை ராகுல் காந்தி மீது கூறப்பட்டு வந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கும் வகையில் இது உள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















