சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பற்றிய ஆன்லைன் சான்றிதழ் படிப்பைத் தொடங்கியுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் கட்டுமானத் தொழில்நுட்பம், மேலாண்மை நடைமுறைகளில் உள்ள நவீன முன்னேற்றங்கள் கற்பிக்கப்படுகின்றன.தனித்துவமான இப்பாடத் திட்டத்தின் வாயிலாக இரு முக்கிய பகுதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நவீன மற்றும் நீடித்த கட்டுமானத் தொழில்நுட்பங்களில் ஈடுபடுவோருக்கு பயிற்றுவிப்பது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு அவசியமாகிறது.
வடிவமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்கள் மட்டுமின்றி, பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள், கட்டுமானத் தொழிலில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள் ஆகியோரையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தில், அதிநவீன கட்டுமான மேலாண்மையின் நுட்பங்களும் நடைமுறைகளும் இடம்பெற்றுள்ளன. . இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ந் தேதி கடைசி நாளாகும்.
இது குறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி,
‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ (IITM for all) இலக்கை எட்டும் வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் ஐஐடி தரத்துடன் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு பொறியாளருக்கும், ஆர்வமுள்ள தொழில் வல்லுநர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த பாடத்திட்டத்தை எடுத்துச் செல்ல இக்கல்வி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான படிப்புகள் வடிவமைப்பு அடிப்படைகளை உள்ளடக்கி இருந்தாலும், இந்தத் துறையில் எதிர்பார்ப்புகள் என்னென்ன? கட்டுமானம் நடைபெறும் இடங்களை திறமையுடன் நிர்வகிப்பது எப்படி? என்பதைப் பற்றிய அறிவைப் பெரும்பாலும் எவரும் வழங்குவதில்லை. திட்டப் பணிகளை சரியான நேரத்தில், குறைந்த செலவில் அதே நேரத்தில் உயர்தரத்தில் செய்து த் முடிக்க இத்திறமை அவசியமாகும். அந்த இடைவெளியை துல்லியமாகப் பூர்த்தி செய்யும் வண்ணம் இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய, சிறந்த கல்வியாளர்கள் ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ளனர். தொழில்நுட்ப நிபுணத்துவமும், சவாலான திட்டங்களில் தொழில் துறையினருடன் பணிபுரிந்த அனுபவமும் கொண்ட ஐஐடி மெட்ராஸ்-ன் மூத்த ஆசிரியர் குழுவினர் இப்பாடத்திட்டத்தைக் கற்பிப்பார்கள்.
126 மணி நேரத்திற்குப் பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்புகள், 42 மணி நேரம் ஆசிரிய நிபுணர்களுடன் ஆன்லைன் நேரடி கலந்துரையாடல் ஆகியவற்றுடன் இணைய வழியாகவே வகுப்புகள் நடைபெறும்.
முதலாவது சேர்க்கை வரும் செப்டம்பர் 1, 2023 முதல் தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 20, 2023 . குறிப்பிட்ட தகுதிகள் எதுவும் இல்லை என்ற போதிலும், கட்டடக்கலை, சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அல்லது மேலாண்மை போன்ற பின்னணி இருந்தால் போதும் ,இந்தப் படிப்பில் சேரலாம். ஆர்வம் உள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்: https://code.iitm.ac.in/construction-technology-and-management.
இப்பாடத் திட்டம் 10 தொகுதிகளைக் கொண்டது. அவை வருமாறு:
1. பொறியியல் பொருளாதாரம்
2. கான்கிரீட் தொழில்நுட்பம்
3. சாலை மற்றும் நடைபாதை தொழில்நுட்பம்
4. கட்டுமானத் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு
5. கட்டுமான செயல்முறைகள் – உற்பத்தித்திறன்
6. தரம்
7. ஆயுட்காலம் மற்றும் பழுதுகள்
8. பாதுகாப்பு
9. கட்டுமான காண்ட்ராக்ட்கள்
10. குறைந்த வளத்திற்கு ஏற்ப திட்டமிடலை செம்மையாக்குதல்
கோடு (CODE)
பாடநெறிகள் அனைத்தும் CODE மையத்தின் மூலம் வழங்கப்படும். 1986-ல் நிறுவப்பட்ட தொடர் கல்வி மையம் (CCE) தற்போது ஐஐடி மெட்ராஸ்-ன் சேவை மற்றும் ஆன்லைன் பாடத்திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ (CODE) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இணையம் மூலம் நடத்தப்படும் எம்.டெக் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்தல், என்பிடெல் மற்றும் GIAN படிப்புகளை ஒருங்கிணைத்தல், ஐஐடி மெட்ராஸ்-ன் பிஎஸ் பட்டப்படிப்பு பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்தல், தொழில்துறை மற்றும் தரமேம்பாட்டுக்கான குறுகிய காலத் திறன் வளர்ப்பு பாடத்திட்டங்கள், தரமேம்பாட்டு பாடத்திட்டங்கள், மாநாடுகளுக்கு ஆதரவு அளித்தல், புத்தகங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான தர மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய பணிகளை இந்த மையம் மேற்கொண்டு வருகிறது.