அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். அந்தமான் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றார்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் பழம்பெரும் நுழைவாயிலாக உள்ள போர்ட் பிளேயர், சுற்றுலாவுக்கான முக்கிய இடமாகத் திகழ்கிறது. விரிவான பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பன்னாட்டு விமான முனையம், விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதோடு சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
இந்த விமான நிலையத்தின் சிறப்புகள்
இந்த புதிய முனையம் இயற்கையை முன்மாதிரியாக கொண்டு, கடல் மற்றும் தீவுகளை சித்தரிக்கும் வகையில் சிப்பி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 710 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பன்னாட்டு விமான நிலையம் அந்தமான் தீவின் வளர்ச்சிக்கு வழிவகுக்க முக்கியக் கருவியாக இருக்கும்.
40,800 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முனையம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் 2 போயிங் விமானங்கள், 2 ஏர்பஸ் விமானங்கள் இறங்க மற்றும் ஏறும் வகையில் ஓடுபாதை அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்த முடியும்.
வெப்பத்தைக் குறைக்கும் வகையிலும், பகல் நேரங்களில் மின்விளக்குப் பயன்பாட்டை பெருமளவு குறைத்து சூரிய ஒளி வெளிச்சம் கிடைக்கும் வகையிலும் இரட்டை அடுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு எல்இடி மின் விளக்குகள், வெப்பத்தைத் தடுப்பதற்கான கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமிக்க பூமிக்கு அடியில் பெரிய அளவிலான தண்ணீர் தொட்டி உள்ளது.
விமான நிலையத்திலேயே 100 சதவீதம் கழிவுநீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கான ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி மையம் அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளைப் பெருமளவு குறைப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எண்ணற்ற நீடித்த மற்றும் நிலையான அம்சங்கள் இந்தப் புதிய விமான நிலையத்தில் உள்ளது.
போக்குவரத்து தொடர்புக்கான கட்டமைப்பை விரிவுபடுத்துவதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும்.
இந்த விமான நிலையம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு இந்தத் தீவின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கின்றது.