ஊழலுக்கு எதிரான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ – பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ் முழக்கம் நடைபயணத்தை வரும் 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
இராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த நடைபயணத்தில் இடம்பெற உள்ள புகார் பெட்டியின் அறிமுக விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. கட்சியின் மூத்த நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், வி.பி. துரைசாமி, உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று ‘விடியல, முடியல’ எனும் வாசகத்துடன் கூடிய மக்கள் புகார் பெட்டியை அறிமுகம் செய்துவைத்தனர்.
அண்ணாமலையின் நடை பயணத்தின்போது இந்த புகார் பெட்டியும் இடம்பெற்றிருக்கும் எனவும், ஊழல், சட்டம் ஒழுங்கு , கள்ளச்சாராயம், கட்டப் பஞ்சாயத்து, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் அப்பெட்டியினுள் வழங்கினால் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி,
“ஊழலற்ற நேர்மையான தூய்மையான அரசாங்கம் வர வேண்டும் என்ற அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் வரும் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. ஊழலற்ற அரசாங்கம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும், பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து , பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
திமுகவின்ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியின் அவலத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும் இந்த நடைபயணத்தின் இலக்கு .
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ‘இராமேஸ்வரத் தீர்மானங்கள்’ வெளியிடப்படும். தமிழக பாஜக எந்த திசை, இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும், எப்படியான வெற்றியை பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் அந்த தீர்மானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைபயணம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் , 234 சட்டமன்ற தொகுதியையும் கடந்து செல்லும். ஒவ்வொரு நாளும் பாதயாத்திரை மூலமாகவும், வாகனம் மூலமாகவும் அண்ணாமலை மக்களை சந்திப்பார்.
நடைபயணத்தின் இடையே தமிழுக்கும் தமிழகத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார் என்பது குறித்த 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 1 கோடி குடும்பங்களுக்கு அண்ணாமலையின் கடிதம் அனுப்பப்பட உள்ளன. தமிழ்தாயின் சிலை வைக்க தமிழகம் முழுவதும் நடைபயணம் செல்லும் ஊர்களில் புனித மண் சேகரிக்கப்படும்.
அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தின் இடையே மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தேசிய தலைவர்கள் 11 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளனர்.
அண்ணாமலை நாள்தோறும் கிராம சபை நிகழ்ச்சியின் மூலமாக மக்களின் குறைகளைக் கேட்டறிவார், அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் மாபெரும் அரசியல் திருப்புமுனை ஏற்படும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றியை கைப்பற்றும் வகையில் திருப்புமுனை ஏற்படும்.
1967 முதல் நடக்கும் திமுகவின் தவறான ஆட்சிமுறைக்கு எதிராக அரசியல் மறுமலர்ச்சியை இந்த யாத்திரை ஏற்படுத்தும். இதை கட்சி யாத்திரையாக கருதாமல், தமிழக மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் யாத்திரை வருகிறது எனும் சிந்தனையுடன் தமிழக மக்கள் திருவிழா போல வரவேற்க வேண்டும். புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த யாத்திரைக்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரவு தர வேண்டும். இது கட்சிக்கானது அல்ல, 8 கோடி தமிழர்களுக்கானது.
நீங்கள் கேட்பதைப் போன்று அதிமுகவிடம் எங்கள் பலத்தை காட்டுவதற்கான யாத்திரை அல்ல இது, 1967 முதல் தமிழக மக்கள் எப்படி ஏமாற்றப்படுகின்றனர் என்பதை கொண்டு சேர்க்கும் வகையில் அமையும்.
எங்கள் நடைபயணத்தால் எங்களுக்கு ஆதரவு பெருகத்தான் செய்யும், பாஜக பலம் பெற வேண்டும் என்பதே எங்கள் கருத்து. பாஜக பலம் பெறுவதை வரவேற்கதான் செய்வோம்.
உலகிலேயே கடல் பாசியில் அல்வா செய்வோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்த கட்சி திமுக.
இராமநாதபுரம் மட்டும் அல்ல, 543 தொகுதியிலும் மோடி போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்பலாம், ஆனால் அவர் போட்டியிடும் இடத்தை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். ராகுல் காந்தியின் நடை பயணத்தை விட பல மடங்கு பலம் பொருந்தியதாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும்.
இவ்வாறு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.