தமிழகம் முழுவதும் 21 இடங்களில் திருப்புவனம் ராமலிங்கம் கொலை தொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனைகளில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டிலும் காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருப்புவனம் ராமலிங்கம் கொலை தொடர்பாக கும்பகோணம் திருப்புவனம் திருமங்கலக்குடி பாபநாசம் உள்ளிட்ட ஏழு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஆசிப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சில மத தலைவர்களைக் கொலை செய்யும் நோக்கில் சதி திட்டங்கள் தீட்டப்பட்டதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் அடிப்படையிலும் தமிழகத்தில் தஞ்சை மதுரை நெல்லை திருப்பூர் விழுப்புரம் கும்பகோணம் திருச்சி கோவை உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்தது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட என்ஐஏ சோதனைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் முடிவில் ஹார்ட் டிஸ்க், செல்போன்கள், சிம்கார்டுகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக
என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 18 நபர்கள் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் 5 பேர் இன்னும் பிடிப்படாமல் தலைமுறைவாக இருந்து வருகின்றனர்.
அவர்களைப் பிடிப்பதில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதன் அடிப்படையில் இன்று தஞ்சாவூர், மதுரை,நெல்லை, திருப்பூர், விழுப்புரம், திருச்சி, கோவை உள்ளிட்ட 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.