தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் தமிழக மக்களைச் சந்திக்கிறார். பாதயாத்திரை தொடங்கிய 110-வது நாளில் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வரும் நிலையில் பாதயாத்திரைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இராமேஸ்வரத்தில் நாளை ஜூலை 28 ம் தேதி பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை, அந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
31ஆம் தேதி சிவகங்கை செல்லும் அண்ணாமலை மானாமதுரை, திருப்பத்தூர, திருமயம் வழியாக ஆகஸ்ட் 3ஆம் தேதி காரைக்குடி சென்றடைகிறார்.
பின்னர் மதுரை மாவட்டத்தில் 4, 5ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை 6ஆம் தேதி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து மதுரையில் 7ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணாமலை உரையாற்றுகிறார்.
பின்னர் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 14ஆம் தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் அண்ணாமலை அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
நிறைவு நாளில் சென்னையில் மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.