தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள் ” பாதயாத்திரையை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.
பாத யாத்திரையின் இரண்டாம் நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோவில்வாடி கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மீனவ சமுதாய மக்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து உரையாற்றினார். பிரதமர் மோடியின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், மீனவர்களுக்காகக் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்கள் குறித்தும், மீனவ சகோதர சகோதரிகளுடன் அரசு சார்ந்த அவர்களுக்கான தேவைகள் குறித்தும் உரையாடினார்.
பாதயாத்திரை தொடங்கிய பின் முதல் முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
2001லிருந்து 2013 வரைக்கும் 85 தமிழக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி வந்த பிறகு ஒரு தமிழக மீனவர் சுட்டு கொல்லப்படவில்லை. மேலும் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். இன்றைய நிலையில் மீனவர்களின் உயிரும் உடைமைகளும் பத்திரமாக உள்ளது. தமிழக மீனவர்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பது எங்கள் கடமை. இதற்காக பாஜக தொடர்ந்து முயற்சி எடுக்கும். அதில் வெற்றி பெற தொடர்ந்து செயல்படுவோம். இலங்கையில் பிடிபட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளைப் பத்திரமாக மீட்டுக் கொடுக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
தமிழக மீனவர்களுக்கு நான் ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன், பிரதமர் மோடி உங்களுடன் இருக்கிறார், அதற்காகத்தான் மீன் வளத்திற்காக ஒரு துறை, ஒரு அமைச்சர்.
திமுக தேர்தல் அறிக்கையில், இரண்டு லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருவதாக சொன்னார்கள், ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை,. மீனவர்களுக்கு இலவச டீசல் வழங்குவதாக சொன்னார்கள், அதையும் நிறைவேற்றவில்லை. மீன்பிடி தடைக் காலத்தில் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்கள், அதையும் தரவில்லை. ஆனால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூடங்கள் தொடங்கி தந்திருக்கிறார். கடல்பாசிகள் ஆராய்ச்சி நிலையம் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் உருவாக்கித் தந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் தமிழக மீனவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம். கச்சத்தீவை திரும்ப பெற்றாக வேண்டும், அதற்காக பாஜக முயற்சி எடுக்கும் எனத் தெரிவித்தார்.