மணிப்பூர் மாநிலத்தில் இன்னும் பதட்டமான சூழலே இருக்கும் நிலையில் சட்ட விரோதமாக மணிப்பூரில் தங்கியிருக்கும் மியான்மர் நாட்டு மக்களின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணியை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை நிறைவு செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரங்கள் வன்முறைகள் என மெய்டி மற்றும் குகி பழங்குடி இனமக்களுக்கிடையே மோதல் நடந்து வந்தன. மணிப்பூரில் ‘மெய்தி’ இன மக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்குப் பழங்குடியின உரிமை அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், இதற்கு குகி பழங்குடி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. வன்முறைக்கு 100 கக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வன்முறை சம்பவங்களுக்கும் மியான்மர் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக மணிப்பூரில் குடியேறியவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்
மணிப்பூரில் சட்ட விரோதமாக இருக்கும் மியான்மர் நாட்டு மக்களின் அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க அம்மாநில அரசு அதிரடியாக உட்காரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து , மியான்மர் நாட்டு மக்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இந்தப் பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்ளும் மாநில அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவண அமைப்பில் (NCRB) உள்ள ஒரு குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு மணிப்பூரின் அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக தங்யிருக்கும் மியான்மர் நாட்டு மக்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்க உள்ளது. மியான்மர் நாட்டவர்களின் பையோ மெட்ரிக் முறையில் சோதனை நடத்தி பதிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் வனங்கள் அழிப்பு மற்றும் வன்முறைகளுக்கும் மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களே காரணம் என்று அம்மாநில முதல்வர் பிரேன்சிங் ஏற்கனவே குற்றச்சாட்டியிருந்தார். இந்த நிலையில் மணிப்பூர் அரசு மேற்கொள்ளும் இந்தப் பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.