2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை 11 குழுக்களாக பிரித்து சந்தித்து வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி, இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தேர்தல் வியூகங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாடிய பிரதமர் மோடி, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று மக்களிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று, மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூற வேண்டும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சுயநலத்தால் உருவானது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி தியாகத்தால் உருவானது. இதனால் சில இடங்களில் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்தது. பீகாரில் நிதீஷ்குமாருடன் கூட்டணி வைத்தோம். அவரது கட்சியை விட அதிக சட்டமன்ற உறுப்பினர்களை நாம் வைத்திருந்தோம். ஆனாலும், அவருக்கே முதல்வர் பதவியைக் கொடுத்தோம். ஆனால், கூட்டணியை முறித்துக் கொண்டு, எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து விட்டார். அதேபோல, பஞ்சாப்பில் அகாலிதளம் கட்சியின் ஆட்சியில், அக்கட்சியைவிட நாம் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தோம். எனினும், துணை முதல்வர் பதவி கேட்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.
இதிலிருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தியாகம் புரியும்.” இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.