அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று விட்டோம். இனி நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் சிக்ஸர் அடிப்போம் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்பட கூறி இருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டிருக்கும் எதிர்க்கட்சிகள், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றன. இத்தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும், நாளையும் நடக்கிறது. நாளை மறுநாள் விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசவிருக்கிறார்.
இந்த நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 2018-ம் ஆண்டு இதே போல ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். அப்போதே, 2023-ம் ஆண்டும் இதேபோன்றதொரு தீர்மானத்தை கொண்டு வருவார்கள் என்று நான் கூறினேன். அது நடந்து விட்டது.
நேற்று டெல்லி சேவைகள் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடந்த போது, சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடக்கும் அரை இறுதி போட்டி என்று கேலி செய்தனர். ஆனால், இந்த அரை இறுதிப் போட்டியில் நாம் வெற்றி பெற்று விட்டோம். இந்த மசோதைவை வெற்றிபெறச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களான உங்களுக்கு எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்பது நமக்கு இறுதிப்போட்டி போன்றது. ஆகவே, இந்த போட்டியில் நாம் வெற்றிபெற்று சிக்ஸர் அடிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயர் இந்தியா அல்ல கமாண்டியா (ஆணவம் பிடித்தவர்கள்). இவர்கள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம், இந்தியா கூட்டணியின் அவநம்பிக்கையின் வெளிப்பாடாகும். அவர்களில் யார், யாருடன் இருக்கிறார்கள் என்பதை சோதித்துப் பார்க்கவே இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.
சமூக நீதியைப் பற்றி பேசும் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல், ஊழல் மூலம் சமூக நீதியை மீறுகின்றனர். ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் இருந்து இந்தியா மீள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.