மகாராஷ்டிராவில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்க முடிவு செய்திருப்பதாக தனியார் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தற்போது, உலகிலேயே மிகவும் உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைதான் இருந்து வருகிறது. இச்சிலை குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் கெவாடியா அருகே சர்தார் சரோவர் அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது.
இந்த நிலையில், இச்சிலையை விட மிக உயரமாக பாரத பிரதமர் மோடிக்கு சிலை அமைக்க டார்வின் பிளாட்ஃபார்ம் இன்ஃப்ரா ஸ்ட்ரெக்சர் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இச்சிலை சுமார் 190 முதல் 200 மீட்டர் வரை உயரம் கொண்டதாக இருக்கும்.
இச்சிலை மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள லவாசா சுற்றுலாத் தலத்தில் அமைக்கப்படவிருக்கிறது. 2023-ம் ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து சிலையைத் திறக்க திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து டி.பி.ஐ.எல். நிறுவனத்தின் தலைவர் அஜய் ஹரிநாத் கூறுகையில், “நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க பிரதமர் மோடி எடுத்துவரும் முயற்சிகள் மற்றும் அவரது தொலைநோக்கு பார்வை ஆகியவற்றுக்காக இந்தச் சிலை அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, பிரதமர் மோடி சிலையுடன், பொழுதுபோக்கு மையம், நினைவுப் பூங்கா, இந்தியாவின் பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையிலான மியூசியம் மற்றும் கண்காட்சிக் கூடம் ஆகியவையும் அமைக்கப்படும் என்றும், இக்கண்காட்சியில் பிரதமர் மோடி இதுவரை செய்த சாதனைகள், புதிய இந்தியாவை உருவாக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை இடம்பெறும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.