எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநில பா.ஜ.க. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு நகர்கிறது. வளர்ச்சித் திட்டங்களில் காங்கிரஸ் கவனம் செலுத்தாததால், நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும், 18 ஆயிரம் கிராமங்களில் மின் வசதி இல்லாமல் இருப்பதாக கூறினார்.
மத்திய அரசின் நடவடிக்கை, கிராமப்புற பெண்களின் சமூக மற்றும் பொருளாதார
நிலையில் சாதகமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்குடன் அரசு இயங்கி வருவதாகவும், முழு உத்வேகத்துடன் வளர்ச்சிப் பாதையில் நாடு முன்னேறி வருகிறது.
எந்தத் துறையிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் அபார சக்தி மாவட்ட ஊராட்சிகளுக்கு உண்டு. அத்தகைய சூழ்நிலையில், பாஜக பிரதிநிதியாக அனைவரின் பங்கும் பெரிதாகிறது. வளர்ந்த இந்தியாவிற்கு சமமாக உங்கள் மாவட்டத்தின் வளர்ச்சியும் முக்கியமானது.
2024ல் நமது மாவட்டமும் வளர்ச்சி அடைய வேண்டும், எந்த தரத்திலும் பின்தங்காமல் இருக்க வேண்டும் என்று இந்த மாநாட்டில் பாஜக பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசிக் கொள்ள வேண்டும். இதற்கு யார், எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஐந்தாண்டு வரைபடத்தை தயார் செய்யுங்கள். தங்கள் மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்று பாருங்கள், அது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யுங்கள்.
ஜம்மு காஷ்மீர் இதற்கு மிகப்பெரிய உதாரணம். 2019 ஆம் ஆண்டில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக பஞ்சாயத்து ராஜ் தேர்தல் நடைபெற்றது.
முதன்முறையாக அங்கு அடிமட்ட அளவில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது. 2014க்குப் பிறகு முதல்முறையாக, ஜில்லா பரிஷத் உள்ளூர் சுயராஜ்யத்தை வலுப்படுத்தப் பணியாற்றினார். பஞ்சாயத்து ராஜிற்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது முந்தைய காங்கிரஸ் அரசை விட மூன்று மடங்கு அதிகம். ஒன்பது ஆண்டுகளில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பஞ்சாயத்து வீடுகள் கட்டப்பட்டன.
உலக அளவில் இந்தியாவின் பெயர் வெளிவரும்போது, நமது மாவட்டத்தில் இருந்து என்னென்ன பொருட்கள் உலகச் சந்தைக்கு வரும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றார். பிரதிநிதிகள் தங்கள் கிராமத்தின் பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு உழைக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உதவி செய்யுங்கள். இயற்கை விவசாயம் செய்யப்படும் ஐந்து கிராமங்களையாவது தேர்வு செய்யவும், பாஜக ஆளும் மாநிலங்களில் இது எளிதாக நடக்கும் எனத் தெரிவித்தார்.
ஐந்து அல்லது பத்து கிராமங்கள் கொண்ட குழுவை அமைத்து ஆயுஷ்மான் யோஜனா மூலம் அவர்கள் எவ்வாறு பயனடைந்தார்கள் என்பதைக் கேட்டறியுங்கள், இது மனிதகுலத்தின் ஒரு சிறந்த வேலை, சுகாதார நல மையம் அமைக்க, அரசின் இ-சஞ்சீவனி திட்டம் குறித்து கிராம மக்களுக்கு எடுத்து சொல்லி, அனுபவமிக்க மருத்துவர்களிடம் நல்ல ஆலோசனை பெற செய்யுங்கள்.
சுதந்திரம் அடைந்து கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை பாஜக அரசு செய்துள்ளது. எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும், ஏழைகளுக்கு உதவி இருக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை என தெரிவித்தார்.