நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கிக் கிடக்கிறது. இந்த சூழலில், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தின் மீது இன்றும், நாளையும் விவாதம் நடக்கின்றன. நாளை மறுநாள் பிரதமர் மோடி பதிலளித்து பேசுகிறார்.
இந்த நிலையில், இன்று நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின் பேசிய பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே, “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் இடையே அவர்களுக்குள் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா என்பதற்கான விரிவாக்கம்கூட எதிர்க்கட்சியினருக்குத் தெரியவில்லை. மேலும், ராகுல் காந்தி, மோடி என்கிற ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தி இருக்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்றம் நற்சான்றிதழ் வழங்கவில்லை. மாறாக தடைதான் விதித்திருக்கிறது. இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை.
ஆனால், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்கிறார். மேலும், நான் சாவர்க்கர் இல்லை என்கிறார். ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கர் ஆக முடியாது. காரணம், சாவர்க்கர் ஒரு தேசியவாதி. எனவேதான் சொல்கிறேன், ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கர்போல் ஆக முடியாது” என்று கூறியிருக்கிறார். இவரது பேச்சு நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.