செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை முடிக்க எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பதோடு, தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்து சம்மன் அனுப்பி இருக்கிறது.
2011 முதல் 2016 வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமானோரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக, செந்தில் பாலாஜியிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்த சென்னையைச் சேர்ந்த 2 பேர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.
இந்த வழக்கை கடந்த மே மாதம் 16-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, இராமசுப்பிரமணியின் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இந்த சூழலில்,இந்த சூழலில் செந்தில் பாலாஜி பயண மோசடி வழக்கில் விசாரணையை நடத்த மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இன்னும் எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? 6 மாத காலமெல்லாம் அவகாசம் தர முடியாது. குறைந்தபட்ச கால அவகாசம் தான் தர முடியும். எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரில் வந்து கேட்கட்டும் என்று காட்டமாகக் கூறினர்.
பின்னர், தொடர்ந்து நடந்த விசாரணையின் போது செப்டம்பர் 20-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், தவறினால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும் உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.