அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது.
பொறியியல் கல்லூரியில் சேர நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு மே 5 முதல் ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.
பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2,29,175 அதில் 1,87,847பேர் விண்ணப்பக் கட்டணத்துடன், சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்திருந்த நிலையில், அவர்களில் 1,78,959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு கலந்தாய்வு ஜூலை 22ம் தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது.
பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வுச் செய்ய வேண்டும்.
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை முதல் கட்ட பொதுக் கலந்தாய்வு 11 நாட்கள் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுக்கான விருப்ப இடங்களை தேர்வு செய்து அதில் அவர்களுக்கான இடங்களை உறுதி செய்தனர்.
முதல் சுற்றுக் கலந்தாய்வின் இறுதி முடிவில் 16 ஆயிரத்து 64 மாணவர்கள், அவர்கள் விரும்பும் இடங்களை தேர்வுசெய்துள்ளனர்.
இதையடுத்து இரண்டாவது சுற்று பொறியியல் கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், கலந்தாய்வில் பங்கேற்றுள்ள 442 கல்லூரிகளில் 193 கல்லூரியில் ஒரு இடங்கள் கூட நிரம்ப வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.