ஆடி அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17 வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் மிகவும் பிரச்சித்திப் பெற்ற தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினரால் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆடி அமாவாசை அன்று மலைமேல் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமியை வழிபடுவது இந்துக்களின் மிகப் புண்ணியமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமாகலிங்க சுவாமியை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு வருகிற 16 ஆடி அமாவாசை நாளாக இருப்பதால், ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17-ந் தேதி வரை சதுரகிரி மலைக் கோவிலுக்குச் சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.