திமுக கடந்த 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருக்கும் போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி, கூடுதலாகக் கனிமவளத் துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு 28 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி, திமுக நிா்வாகிகள் கோதகுமாா், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது சதானந்தன், கோத குமார், ஜெயச்சந்திரன், கோபி நாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி எம்.பி., ராஜ மகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. முதல் சாட்சியும், வழக்கின் புகார்தாரரும், முன்னாள் தாசில்தாரும் ஆன குமாரபாலன், உடல்நிலை சரியில்லாததால், சக்கர நாற்காலியில் வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் அவர் நீதிபதி முன்னிலையில் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற கௌதம சிகாமணி, ராஜ மகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை எனவே வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.